கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு.. தியேட்டர்களை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

 
NTK NTK

விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ள கிங்டம் படம் தமிழர்களை இழிவுபடுத்துகிறது என்று கூறி அந்தப் படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். படத்தை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் `கிங்டம்' திரையிடப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திரையரங்கை முற்றுகை யிட நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். அவர்கள் திரையரங்க நுழைவுவாயில் முன் முழக்கமிட்டவாறு முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். சிலர் திரையரங்கு முன் மறியலில் ஈடுபட்டனர். அதனால் கட்சி நிர்வாகிகள் வெங்குளம் ராஜூ, கண் இளங்கோ உள்ளிட்ட 35 பேரை போலீஸார் கைது செய்து ஒரு திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

திருச்சியில் நாதக மேற்கு தொகுதி மண்டலச் செயலாளர் கேசவன், கொள்கைப் பரப்பு மாநிலச் செயலாளர் அசுரன் சரவணன், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர், வில்லியம்ஸ் சாலையில் உள்ள திரையரங்குக்கு  சென்று, கிங்டம் திரைப்படத்தை திரையிடக்கூடாது என மேலாளரிடம் வலியுறுத்தினர்.

பொள்ளாச்சியில்,  ‘கிங்டம்’ திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். நாம் தமிழர் கட்சியின் மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் முகமது காஜா மைதீன் தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் கட்சியினர் அளித்த மனுவில்,

‘சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உள்ள கிங்டம் திரைப்படத்தில், ஈழத் தமிழர்களை குற்றப் பரம்பரை போல சித்தரித்து தமிழ் தேசிய இனத்தின் வரலாற்றை திரித்து, ஈழத் தமிழர்கள், மலையக தமிழர்களை ஒடுக்குவது போன்ற காட்சிகள் உள்ளன. எனவே, கிங்டம் திரைப்படத்தை தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

From around the web