பிரபல காமெடி நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி மரணம்.. சோகத்தில் திரையுலகம்
பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 66.
ஆர்.எஸ்.சிவாஜி ஒரு சினிமா குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை எம்.ஆர்.சந்தானம் 1940-களின் நடுப்பகுதியில் இருந்து ஒரு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தமிழ் பேசும் படங்களுடன் தொடர்புடையவர். அவரது சகோதரர் எம்.ஆர்.சந்தானம் மற்றும் அவரது மருமகன் சஞ்சய் பாரதி போன்ற அவரது குடும்ப உறுப்பினர்களும் தமிழ் திரையுலகில் பணியாற்றி வருகின்றனர்.
சிவாஜியும் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை நடிகராக சிறந்து விளங்கினார். 1981-ல் வெளியான ‘பன்னீர் புஷ்பங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்.எஸ்.சிவாஜி. தொடர்ந்து மதுமலர், விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், மாப்பிள்ளை, மௌனம் சம்மதம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் உதவி இயக்குநராகவும், ஒலி வடிவமைப்பாளராகவும், லைன் புரொடியூசராகவும் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.
1980களில் இருந்து திரையுலகில் முழுமையாகச் செயல்படும் அவர், 1980கள் மற்றும் 1990களில் பல மறக்கமுடியாத பாத்திரங்களைச் செய்துள்ளார். கமல்ஹாசனின் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
1989-ல் கமல் நடிப்பில் வெளியான ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தில் ஜனகராஜ் உடன் போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்திருப்பார். அவருடைய காமெடி டயலாக், “தெய்வமே! நீங்க எங்கயோ போயிடீங்க, சார்” எனும் வசனம் மேலும் மிகவும் பிரபலமடைந்தார். இறுதியாக இவர் சென்ற ஆண்டு சாய் பல்லவியின் அப்பாவாக நடித்த கார்கி படம் மூலம் தன் நடிப்புக்காக பாராட்டுகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் உடல்நலக்குறைவால் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.