பிரபல நடிகையும் இயக்குநருமான ஜெயதேவி மரணம்.. திரையுலகில் சோகம்!!

 
Jayadevi

பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும், நடிகையுமான ஜெயதேவி நேற்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 65.

நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி, 1976-ல் வெளியான ‘இதய மலர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்தில் நடித்தார். 1984-ல் வெளியான ‘நலம் அறிய ஆவல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

அதன் பிறகு விலாங்கு மீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், சரியான ஜோடி, புரட்சிக்காரன், பெண்களின் சக்தி போன்ற பலத் திரைப்படங்களை இயக்கிய ஜெயதேவி, 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 15 படங்களுக்கு மேல் தயாரித்துள்ள இவர், பி.சி.ஸ்ரீராம் மற்றும் வேலு பிரபாகரன் போன்ற தொழில்நுட்ப வல்லுநர்களைத் தனது முயற்சிகள் மூலம் அறிமுகப்படுத்தினார்.

Jayadevi

2000-ம் ஆண்டில், புரட்சிக்காரன் படத்தில் எழுத்தாளராகப் பணியாற்றிய போது, ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேலு பிரபாகரனுடன் காதல் வயப்பட இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணமான சில வருடத்திலேயே இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன்பின், ஜெயதேவி திருமணம் செய்யாமல், பல ஆண்டுகளாக முரளி என்பவரின் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

RIP

தமிழ் சினிமாவில் முதல் பெண் இயக்குநராக ஜொலித்த ஜெயதேவியின் மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. 65 வயதான ஜெயதேவிக்கு குழந்தைகள் இல்லாததால் நேதாஜி என்பவரை தத்தெடுத்து வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web