நெல்சன் பிறந்தநாள்.. ஜெயிலர் பட ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வைரல்!!
இயக்குநர் நெல்சன் பிறந்தநாளை முன்னிட்டு, ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோஸ் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
2018-ல் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். அப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘டாக்டர்’ படத்தை இயக்கினார். இதுவும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தது.
கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நெல்சனுக்கு அடுத்ததாக கிடைத்த மிகபெரிய வாய்ப்பு தான் தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’. இப்படம் கடந்தாண்டு வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டியது. பீஸ்ட் படத்திற்கு பின்னர் நெல்சனுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
ரஜினிகாந்த் மற்றும் நெல்சன் இணைந்து பணியாற்றியுள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்துடன் விநாயகன், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ரோபோ சங்கர், வஸந்த் ரவி, மிர்ணா, ஷிவ ராஜ்குமார், தமன்னா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி திரையங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, தற்போது பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் நெல்சன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக ஜெயிலர் படத்தின் BTS புகைப்படங்களை வெளியிட்டு படக்குழு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.