சூர்யாவிற்கு ஜோடியாகும் நஸ்ரியா? சூர்யா 43 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா உருவாகயுள்ள படத்தில் நடிகை நஸ்ரியா நடிக்கயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது, இயக்குநர் சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 'கங்குவா' திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.
இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தனது 43வது படத்தில் நடிக்கவுள்ளார் . 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து இப்படத்தில் கதாநாயகியாக நடிகை அதிதி ஷங்கர் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது கதாநாயகியாக நடிக்க நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் அதிதி ஷங்கருக்கு பதிலாகவா அல்லது மற்றொரு கதாநாயகியாகவா நடிக்கவுள்ளார் என்பது குறித்து எந்த தெளிவான தகவலும் இல்லை.
தமிழில் ‘நேரம்’, ‘ராஜா ராணி’ போன்ற படங்களில் நடித்த நஸ்ரியா, மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்த பின் சினிமாவை விட்டு ஒதுங்கினார். சிறு இடைவெளிக்கு பின் மீண்டும் படங்களில் தற்போது நஸ்ரியா நடித்து வருகிறார். இந்தபடம் உறுதியாகும் பட்சத்தில் தமிழில் இவரின் ரீ-என்ட்ரி படமாக இது அமையும்.