நயன்தாரா அறிமுகப்படுத்திய ஹீரோ.. யார் தெரியுமா?

 
Nesipaya

மறைந்த முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி நடித்திருக்கும் ‘நேசிப்பாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை நயன்தாரா அறிமுகம் செய்திருக்கிறார்.

மறைந்த நடிகர் முரளியின் இளைய மகன் ஆகாஷ் முரளி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. விஷ்ணு வர்தன் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். லவ் டிராமா ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

Nesipaya

நிகழ்வில் நடிகை நயன்தாரா மற்றும் ஆர்யா இருவரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். இதில் ஆகாஷ் முரளியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு நயன்தாரா வாழ்த்திப் பேசினார்.

நயன்தாரா பேசியதாவது, “‘நேசிப்பாயா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஆகாஷ் முரளிக்கு வாழ்த்துகள்! எனக்கு அதிதி ஷங்கரை ரொம்பவே பிடிக்கும். மிகத் திறமையானவர். நான் பொதுவாக எந்த விழாவுக்கும் போக மாட்டேன். ஆனால், இது ரொம்பவே ஸ்பெஷல். இயக்குநர் விஷ்ணு வர்தன், அனுவுடைய படம் இது. பதினைந்து வருடமாக எனக்கு இருவரும் நல்ல பழக்கம். என்னுடைய குடும்பம் போலதான் இவர்கள். அதனால், இந்த நிகழ்வுக்கு என்னால் நோ சொல்ல முடியவில்லை. இவர்கள் ஆகாஷை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி. ரொம்ப நாள் கழித்து ஒரு ஸ்வீட்டான லவ் ஸ்டோரி பார்க்க இருக்கிறீர்கள்” என்றார்.

Nesipaya

ஆகாஷ் முரளி, “இந்த விழாவிற்காக நேரம் எடுத்து என்னை அறிமுகப்படுத்திய நயன்தாரா மேம்க்கு நன்றி. நடிக்க ஆரம்பித்த புதிதில் நடுக்கமாக இருந்தது. அவர்தான் என்னை கூல் செய்தார். இயக்குநர் விஷ்ணு வர்தன் சார், அனு வர்தன் மேம், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. யுவன் சார் இசையில் நடித்திருப்பது மகிழ்ச்சி. அம்மா, அண்ணன் வந்திருக்கிறார்கள். அண்ணாவிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்” என்றார்.

From around the web