ஜப்பானில் கோலாகலமாக நடைபெற்ற நெப்போலியன் மகன் திருமணம்.. ட்ரெண்டாகும் புகைப்படங்கள்.. குவியும் வாழ்த்து

 
Napolean

நடிகர் நெப்போலியனின் மகன் தனுஷ் - அக்சயா ஜோடியின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

1991-ல் பாரதிராஜாவின் இயக்கத்தில் அறிமுகமான நெப்போலியன் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், வில்லனாகவும் தடம் பதித்தவர். பல படங்களில் ஹீரோவாக நடித்த அவர் அரசியலிலும் தனது தடத்தை பதித்தவர். ஒன்றிய இணையமைச்சராக இருந்த அவர் தற்போது சினிமா மற்றும் அரசியலிலிருந்து முழுதாக ஒதுங்கி வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். அதற்கு காரணம் அவரது மகன் தனுஷ். நெப்போலியனுக்கு தனுஷ், குணால் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். அவர்களில் தனுஷ் மூத்த மகன்.

தனுஷுக்கு சிறு வயதிலிருந்தே தசை சிதைவு நோய் வந்துவிட்டது. முதலில் இங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு அது ஒத்துவரவில்லை. இதனையடுத்து அமெரிக்காவுக்கு சென்று அங்கு செட்டிலானார் நெப்போலியன். அந்நாட்டில் தனுஷுக்கான சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் தனுஷுக்காகவே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியையும் அங்கே தொடங்கி தனது மகனை ஓனராக்கி அழகு பார்த்தார் நெப்போலியன். தன் மகனுக்காக நெப்போலியன் செய்யும் ஒவ்வொரு செயலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

Napolean

இந்த சூழலில் இப்படி இருக்க தனுஷுக்கு திருமணம் செய்து வைக்க நெப்போலியன் முடிவு செய்தார். அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அக்சயா என்ற பெண்ணை பார்த்தார். தனுஷ் - அக்சயா நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் நடந்தது. அதில் தனுஷால் கலந்துகொள்ள முடியவில்லை. அதேசமயம் வீடியோ காலில் பங்கேற்றார் தனுஷ். அவரது திருமணம் அமெரிக்காவில் நடந்தால் சில சிக்கல்கள் வரும் என்பதால் ஜப்பானில் நடத்த திட்டமிட்டார்.

அதனையடுத்து தனது குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து ஜப்பானுக்கு கப்பலில் சென்றார். திருமண ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்த சூழலில் அத்திருமணத்தில் கலந்துகொள்வதற்காக குஷ்பூ, ராதிகா, மீனா, கலா மாஸ்டர், சரத்குமார், பாண்டியராஜன் என பல பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்தனர். திருமணத்துக்கு முன்பாக நலுங்கு, ஹல்தி உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன. அப்போது நெப்போலியன் மற்றும் உறவினர்கள் மணமக்களுக்கு நலுங்கு வைத்தார்கள்.

இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது மணமக்கள் இருவரும் சிறப்பான உடையை அணிந்திருந்தனர். அக்‌ஷயா சந்தன நிற பட்டு சேலையும், தனுஷ் சிகப்பு நிற சட்டையும், வெள்ளை நிற வேட்டியும் அணிந்திருந்தார். திருமண மேடையில் நெப்போலியன் மற்றும் அவரது மனைவி சுதா, அக்‌சயாவின் தந்தை, தாய் ஆகியோர் மணமக்கள் அருகே அமர்ந்து தேவையான சம்பிரதாயங்களை செய்தனர். மேலும் தாலியை தனுஷின் தாய் சுதா எடுத்துக்கொடுத்தார். தற்போது தனுஷ் - அக்‌சயா திருமணம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அவர்களுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

From around the web