தாய்மையில் நிரம்பிய இசை ! ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாளில் பழநிபாரதி உருக்கம்!!

 
ஒரேஒரு ட்வீட்… மொத்த இந்தியாவையும் அதிர வைத்த ஏஆர் ரஹ்மான்!

நேற்று ஜனவரி 6ம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் தனது 58வது பிறந்தநாளை கொண்டாடினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல், திரையுலக பிரமுகர்கள் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்தனர். கவிஞர் பழநிபாரதியின் வாழ்த்துச் செய்தி மிகவும் உருக்கமாக அமைந்துள்ளது.

கவிஞர் பழநிபாரதி தனது வாழ்த்துச் செய்தியில்,

”இயக்குநர் விக்ரமன் அவர்கள்தான் எனது திரையுலகப் பயணத்தின் கிழக்குத் திசை. அவரது "பெரும்புள்ளி" படத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் என்னை அறிமுகம் செய்தார். 

படத்தில் பாடல் இடம்பெறவில்லை. பிறகு சிற்பியின் இசையில், "நான் பேச நினைப்பதெல்லாம்"  "கோகுலம்" படங்களிலும் என்னை எழுத வைத்தார். படங்கள் வெளியாவதில் தாமதம். 

இந்தச் சூழலில்தான் (1993) ஏ.ஆர்.ரகுமான் இசையில் "புதிய மன்னர்கள்" படத்தை விக்ரமன் இயக்குவதாக இருந்தது. ரகுமான் இசையில் வைரமுத்துதான் பாடல் எழுதுவார் என்கிறபோது, "பழநிபாரதி என்பவரை நான் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியிருக்கிறேன்; அவர் வளரும்வரை தொடர்ந்து நான் வாய்ப்புத்  தர வேண்டும்" என்று ரகுமானிடம் என்னைக் கொண்டு சேர்த்தவர் விக்ரமன்.

"எடுடா அந்தச் சூரிய மேளம்
அடிடா நல்ல வாலிபத் தாளம்
எழுந்துவிட்டோம் 
இமயம் போலே
உயர்ந்து நிற்கும் 
சிகரமெல்லாம் 
நமக்குக் கீழே"

என்கிற பாடலின் பெரும்பாலான வரிகள் ரகுமானுக்கும் பிடித்தது. படத்தின் அடுத்தடுத்த நான்கு பாடல்களை நான் எழுதும் வாய்ப்பு அமைந்தது. 

"நீ கட்டும் சேல மடிப்புல நான் 
கசங்கிப் போனேண்டி - உன் 
எலும்பிச்சம்பழ நிற இடுப்புல 
கெறங்கிப்போனேண்டி" என்கிற பாடல் பள்ளி, கல்லூரி ஆண்டுவிழாக்களின் கொண்டாட்டப் பாடலானது. இது எழுதப்பட்ட பிறகு இசையமைக்கப்பட்ட பாடல்.

விக்ரமன் என் மீது வைத்திருந்த அக்கறையும் நம்பிக்கையும்தான் அது. அதன்பின், ரகுமான் இசையில், ராம்கோபால் வர்மாவின் மொழி மாற்றுப் படமான "ஓட்டம்" (அனைத்துப் பாடல்கள் ) உதயா, பாய்ஸ், ஸ்டார் படங்களிலும் எழுதினேன். 

ரகுமானை முதன்முதலில் சந்திக்கக் காத்திருந்த வேளையில், அவரது அம்மாதான் முதலில் மாடியிலிருந்து இறங்கி வந்தார். சந்திப்புக்கு முன்பாக எனது கையில், ஒரு பச்சைக் கயிற்றைக் கட்டிவிட்டார். அது அவரது நன்னம்பிக்கை. 

பிறகு, என் திருமணம் முடிந்த சில நாளில் என் இல்லம் வந்து, பழத்தட்டுடன் தங்கச் சங்கிலி அணிவித்து எங்களை ஆசீர்வதித்தார். 

தாய்மையில் நிரம்பிய இசை;
இசையில் நிரம்பிய தாய்மை
நினைவலைகளில் மலர்களாக நீந்துகின்றன.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு இனிய தாலாட்டு நாள் வாழ்த்துகள்...” என்று  குறிப்பிட்டுள்ளார்.

From around the web