தாய் குறித்து அவதூறு வீடியோ.. யூடியூப் சேனல் மீது நடிகர் அருண் விஜய் பரபரப்பு புகார்
தன்னையும் , தனது குடும்பத்தை பற்றி தவறான தகவல்களை யூடியூபில் பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடிகர் அருண் விஜய் புகார் அளித்துள்ளார்.
1995-ல் வெளியான ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து பிரியம், கங்கா கவுரி, காத்திருந்த காதல், பாண்டவர் பூமி, ஜனனம், தவம், என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் தரமான படங்களை தேர்வு செய்து நடிக்க தொடங்கினார். அந்த வகையில் இவர் நடித்த குற்றம் 23, செக்கச் சிவந்த வானம், தடம், மாஃபியா, யானை, சினம் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தது.
சென்னை ஈடுகாட்டுத்தாங்கல் கலைமகள் நகரில் திரைப்பட நடிகர் அருண் விஜய் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அருண் விஜய் சார்பில் அவரது வழக்கறிஞர் ராகவன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் நடிகர் அருண் விஜய் பற்றியும், அவரது தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி முத்துகண்ணு (அருண் விஜயின் தாய்) பற்றியும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி சினி சமூகம் என்கிற யூடியூப் சேனலில் 7 நிமிடம் கொண்ட வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக நடிகர் அருண் விஜய் குடும்ப உறுப்பினர்கள் பற்றி எட்டு வீடியோக்களை இந்த யூடியூப் சேனல் வெளியிட்டு இருப்பதாகவும், இதனால் அருண் விஜய் மன உளைச்சலில் இருப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “இந்த யூடியூப் சேனலில் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் பல்வேறு பிரபலங்களின் தவறான படங்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட இந்த யூடியூப் சேனல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதில் பதிவேற்றம் செய்துள்ள வீடியோக்களை முடக்க வேண்டும்” என அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். இப்புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.