ரத்தத்தில் மெத்தில் ஆல்கஹால்... நடிகர் கலாபவன் மணி மரணத்தில் திடுக்கிடும் திருப்பம்..!

 
Kalabhavan Mani

நடிகர் கலாபவன் மணியின் மரணம் குறித்த விசாரணையில் வெளியான புதிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக தன்னுடைய கரியரை ஆரம்பித்தவர் கலாபவன் மணி. கொச்சின் கலாபவன் என்ற நாடக குழுவில் தன்னுடைய தனித்துவமான திறமையை தொடர்ந்து காட்டிக்கொண்டிருந்த அவருக்கு அக்‌ஷரம் என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் வாய்ப்பு கிடத்தது. அதைத் தொடர்ந்து ஸ்வர்ண கிரீடம் சல்லாபம், காத்தில் ஒரு கிண்ணாரம், மை டியர் குட்டிச்சாத்தான், வச்சாலம், காருண்யம், தி குட் பாய்ஸ், ஒரு மருவத்தூர் கனவு, மீனாட்சி கல்யாணம், குடும்ப வார்த்தகள், பிரணய நிலவு, அலிபாபாவும் ஆரார கல்லன்மாரும், க்ரைம் ஃபைல் என பல படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் கலக்கி வந்த கலாபவன் இதற்கிடையே தமிழில் கேப்டன் பிரபாகரன் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிவிட்டார். இருந்தாலும் அவர் வளர்ந்த பிறகு அவர், மமுட்டி நடித்த மறுமலர்ச்சி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து வாஞ்சிநாதன் படத்திலும் ஒரு கேரக்டர் செய்திருந்தார் கலாபவன் மணி. இவரை தமிழ் ரசிகர்களிடையே பலமாக நிலை நிறுத்தியது என்றால் அது சரண் இயக்கத்தில் வெளியான ஜெமினி படம்தான். ஜெமினியை தொடர்ந்து தமிழில் தென்னவன், நாம், ஜே ஜே, வேல், ஏய், பந்தா பரமசிவம், எந்திரன், பாபநாசம் என பல படங்களில் நடித்தார்.

Kalabhavan Mani

இந்த நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் உயிரிழந்தார். முதலில் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்பட்ட சூழலில் பிறகு அவரது மரணத்தில் சந்தேகம் கிளம்பியது. அந்த சந்தேகத்துக்கு தீனி போடும்படியாக கலாபவன் மணியின் உடலில் 3 ரசாயன பொருட்கள் கலந்திருந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையும் தெரிவித்தது. இதனால் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.

இந்நிலையில் கலாபவன் மணி மரணம் குறித்து விசாரணை நடத்திய ஐபிஎஸ் அதிகாரி உன்னிராஜன் அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், “கலாபவன் மணி தினமும் 12 முதல் 13 பாட்டில்கள்வரை பீர் குடித்திருக்கிறார். கல்லீரல் செயலிழந்த நிலையிலும் அளவுக்கு அதிகமாக பீர் குடிக்கும் பழக்கத்தை அவர் கைவிடவில்லை.

Kalabhavan Mani

கல்லீரல் செயலிழந்து ரத்த வாந்தி எடுத்தபோதும் அவரால் பீர் குடிப்பதை நிறுத்தவே முடியவில்லை. மரணத்தை அவரேதான் தேடிக்கொண்டார். அவர் உயிரிழந்த 2016-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதியும் 12 பாட்டில்கள் பீர் குடித்திருக்கிறார். அதில் மெத்தில் ஆல்கஹாலும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது” என்றார். உன்னிராஜன் இப்படி கூறியிருப்பது மலையாள திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

From around the web