கோலாகலமாய் நடந்த மேகா ஆகாஷ் திருமணம்.. நேரில் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வாழ்த்து
நடிகை மேகா ஆகாஷ் தன்னுடைய நீண்ட நாள் காதலன் சாய் விஷ்ணுவுடன் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
2019-ல் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படத்தைத் தொடர்ந்து சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அந்த படம் சுமாராகக்கூட ஓடவில்லை. இதனால், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற மறுவார்த்தை பேசாதே, மடிமீது நீ தூங்கு பாடல் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. பாடல் ஹிட்டான அளவிற்கு படம் ஹிட்டாகவில்லை.
அதன் பின், படவாய்ப்பே இல்லாமல் இருந்த இவர் அசோக் செல்வனுடன் சேர்ந்து சபாநாயகன்படத்தில் நடித்தார். பின் சந்தானம் நடிப்பில் கடந்த பிப்ரவரியில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். அதன் பின் விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய் மில்டன் நடிப்பில் உருவாக மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஆகஸ்ட் 2 முதல் வெளியானது. ஆனால் படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லாததால், படம் வெளியான வேகத்தில் ஓடிடிக்கு வந்துவிட்டது.
நடிகை மேகா ஆகாஷிற்கு அடுத்தடுத்த படவாய்ப்பு வந்த போதும், தனது திறமையை நிரூபிக்கும் வகையில், எந்த படமும் அமையாததால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவு செய்த மேகா, தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாய் விஷ்ணுவுடன் சத்தமில்லாமல் கேரளாவில் நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது.
தற்போது மேகா ஆகாஷ், தான் காதலித்த சாய் விஷ்ணுவை திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் சென்னை, திருவான்மியூரில் உள்ள ஶ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் செண்டரில் இன்று (செப். 15) காலை 11 மணிக்கு நடந்து முடிந்தது. மேகா ஆகாஷின் அம்மா கேரளா, அப்பா தெலுங்கு, மாப்பிள்ளை சாய் விஷ்ணு தமிழ் என்பதால் தமிழ், கேரளா, தெலுங்கு ஃபுயூஷன் ஸ்டைலில் இத்திருமணம் நடைபெற்றது. செண்டை மேளம், தவில், நாதஸ்வரம் இசைக்க இருவரும், இருவீட்டாரின் வாழ்த்து மழையுடன் திருமணம் செய்துகொண்டனர். மாப்பிள்ளை விஷ்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் – கற்பகம் தம்பதியின் மகன் என்பதால் திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இத்திருமணத்தில் பங்கேற்றிருந்தனர்.
நேற்று மாலை நடபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இதுதவிர அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்கள், டி.ஆர்.பாலு எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி, எம்.பி.க்கள் விஜய் வசந்த், விஷ்ணு பிரசாத் உள்ளிட்டோர் இத்திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர்.