பட வாய்ப்புக்காக விஜய் டிவி சீரியலில் ஹீரோவாக களமிறங்கும் மயில்சாமி மகன்!

 
Mayilsamy

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் மிமிக்கிரி கலைஞராக அறியப்பட்ட மயில்சாமி, தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன், காமெடி காட்சிகளில் நடித்து பிரபலமானார். 2000-ம் ஆண்டுக்கு பிறகு நடிகர் விவேக்குடன் இணைந்து பல படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் இன்னும் பிரபலமானார். இதுதவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நடிகர் மயில்சாமி, சினிமாவில் இயங்கி வந்தாலும் பொது சேவைகள் செய்வது, மக்களுடன் இணைந்து மக்களுக்காகவும் சில முன்னெடுப்புகளை செய்வது என இயங்கி வந்தார்.

நடிகர் மயில்சாமிக்கு அன்பு, யுவன் என இரு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரையும் ஒரு நடிகராக பார்க்க ஆசைப்பட்டார் மயில்சாமி. அன்பு ஏற்கனவே கோரிப்பாளையம், மாயாண்டி குடும்பத்தார், போன்ற படங்களை இயக்கிய ராசு மதுரன் இயக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு ‘பார்த்தோம் பழகினோம்’ என்கிற படத்தில் நடித்த நிலையில், இப்படம் ஒரு சில காரணங்களால் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டது.

Mayilsamy

இதைத் தொடர்ந்து 2015-ம் ஆண்டு ராஜசேகர் என்பவர் இயக்கத்தில் ‘அந்த 60 நாட்கள்’ என்ற திரைப்படத்தில் கமிட் ஆனார். முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவான இப்படமும் ரிலீஸ் ஆகாமல் போனது. பின்னர் ‘கொக்கு’ என்ற திரைப்படம் ஒன்றிலும் அன்பு நடித்த நிலையில், அந்த படமும் பாதியிலேயே கைவிடப்பட்டது. இப்படி அடுத்தடுத்து இவர் நடித்த படங்கள் வெளியாமல் போனாலும் துவண்டு விடாமல் நடிகனாக சாதிக்க முயற்சி செய்து வருகிறார்.

2017-ம் ஆண்டு பொம்மலாட்டம் நடக்குது, திரிபுரம் போன்ற படங்களில் நடித்தார் அன்பு. அந்த படங்களும் பட்ஜெட் பிரச்சினை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுமார் 9 வருட போராட்டத்திற்கு பின்னர், அன்பு ஹீரோவாக நடித்த அல்டி என்கிற திரைப்படம், கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இதை அடுத்து 2021-ம் ஆண்டு ரிலீசான ‘சிதம்பரம் ரயில்வே கேட்’ என்ற படத்திலும் அன்பு மயில்சாமி நடித்திருந்தார்.

அண்ணன் அன்புவை தொடர்ந்து, அவரது தம்பியும் மயில்சாமியின் இரண்டாவது மகனுமான, யுவனும் தமிழ் சினிமாவில் ஒரு நடிகனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தொடர்ந்து போராடி வருகிறார். அந்த வகையில், 2016-ம் ஆண்டு வெளியான 'தணியும்' என்ற திரைப்படத்தில் யுவன் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை தழுவியது. இதைத் தொடர்ந்து சத்யராஜின் தீர்ப்புகள் விற்கப்படும் என்கிற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Mayilsamy Son

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் ‘தண்டக்காரன்யம்’ என்ற படத்தில் யுவன் நடித்து வருகிறார். பல வருடங்களாக அண்ணன் - தம்பிகள் இருவருமே திரையுலகில் சாதிக்க போராடி வரும் நிலையில், யுவன் தற்போது வெள்ளி திரையில், இடம் பிடிக்க சின்னதிரையை ஒரு களமாக மாற்றி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியலில் ஹீரோவாக கமிட் உள்ளார்.

யுவன் மயில்சாமி நடிக்க உள்ள சீரியலுக்கு ‘தங்கமகள்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலின் சூட்டிங் தற்போது பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், யுவனின் சமீபத்திய புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சீரியலில் யுவனுக்கு ஜோடியாக ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான நம்ம வீட்டுப் பொண்ணு சீரியலில் கதாநாயகியாக நடித்த அஸ்வினி ஜோடியாக நடிக்க உள்ளார்.

From around the web