மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

 
Mamannan

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘மாமன்னன்’ படத்திற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஒரு கல் ஒரு கண்ணாடி, கதிர்வேலன் காதல், நண்பெண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள உதயநிதி ஸ்டாலின் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படம் வரும் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

Mamannan

இந்த நிலையில், ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில் ஏஞ்சல் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2018ம் ஆண்டு துவங்கி தற்போது 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்ய முடியாததால், தனக்கு 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.

High-Court

இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த 23-ம் தேதி நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வரும் ஜூன் 28-க்குள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ரெட் ஜெயன்ட்ஸ் நிறுவனம் பதில் விளக்கம் தருமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

From around the web