ரஜினிக்கு கோவில் கட்டி சிலையை வழிபட்டு வரும் மதுரை ரசிகர்! வைரலாகும் புகைப்படம்!

 
Rajini

மதுரையில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஒரு ரசிகர் கோவில் கட்டி தினமும் வழிபாடு நடத்தி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம், பாலாபிஷேகம் நடத்துவது உள்ளிட்ட செயல்களில் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி தமிழ் சினிமாவில் நடிகை குஷ்புக்கு தான் முதல் முறையாக ரசிகர்கள் கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தினர். அவரை தொடர்ந்து நடிகைகள் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, நமீதா, நிதி அகர்வால், மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட நடிகைகளுக்கு அவர்களது ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். 

அந்த வகையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு மதுரையில் உள்ள பாசக்கார ரசிகர் ஒருவர் கோவில் கட்டியுள்ளார். சுமார் 250 கிலோ எடை கொண்ட கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட ரஜினிக்கு சிலை தயாரித்து, இன்று அந்தசிலைக்கு வேத விற்பன்னர்களால் யாகம் வளர்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்துவது போன்று ரஜினி சிலைக்கு பூஜைகள் நடைபெற்றது.

Rajini

இதனை தொடர்ந்து, பூஜை முடிந்த பின்னர் அச்சிலையை எடுத்து கோவிலாக வழிபடும் அந்த அறையில் வைத்து, ரசிகரான கார்த்திக் பால், பன்னீர், இளநீர், சந்தனம் , மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகை திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து தீபாராதனை நடத்தினார்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் எனும் ரசிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு கோவில் எழுப்பி வழிபாடு செய்து வரும் வீடியோ வெளியாகி ஒட்டுமொத்த தலைவர் ரசிகர்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Rajini

ரஜினிக்கு ரசிகர் என்பதையெல்லாம் தாண்டி தீவிர பக்தராகவே திருமங்கலத்தைச் சேர்ந்த கார்த்திக் மாறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்துக்கு கோவில் கட்ட வேண்டும் என்கிற தனது கனவை நனவாக்கி அவரை பூஜித்து தினமும் வழிபாடு செய்து வருவது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக கூறியுள்ளார்.

From around the web