‘எல்.ஜி.எம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா.. சென்னையில் நடைபெறும் விழாவில் தோனி!

 
LGM

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமான தோனி, கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ‘தோனி எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் மூலம் தோனியும் அவரது மனைவி சாக்ஷி சிங் இணைந்து திரைப்படங்களைத் தயாரித்து வருகின்றனர்.

LGM

அந்த வகையில் அவர்களின் தயாரிப்பில் தற்போது வெளிவரக் காத்திருக்கும் திரைப்படம் எல்ஜிஎம் -  ‘லெட்ஸ் கெட் மேரிட்’. தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் உள்ள நட்புப் பிணைப்பை காட்ட, தங்களது தயாரிப்பில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிப்பது என அவர்கள் முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர் விஸ்வஜித் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் முடிவடைந்திருக்கும் நிலையில், டீசர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்றது.


இந்த நிலையில், ‘லெட்ஸ் கெட் மேரிட்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தோனி ஆகியோர் கலந்து கொண்டு படத்தின் பாடல் மற்றும் டிரெய்லரை வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

From around the web