பிசியான படப்பிடிப்பில் லெஜண்ட் சரவணன்!
பிரபல சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தன்னுடைய கடை விளம்பரத்திற்காக தமன்னா, ஹன்சிகா வுடன் நடித்து பிரபலமானார். அதைத் தொடர்ந்து மிகப்பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட தி ஜெலண்ட் படத்தை தயாரித்து நடித்தார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஜேடி&ஜெர்ரி இரட்டை இயக்குனர்கள் இயக்கியிருந்தனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. வணிக ரீதியாக வெற்றி இல்லையென்றாலும் தன்னை ஒரு நடிகராக நிலை நிறுத்திக் கொள்ளும் வகையில் சரவணனுக்கு வெற்றியே. லெஜண்ட் என்ற அடைமொழியையும் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்.
இந்நிலையில் எதிர்நீச்சல், கொடி, பட்டாஸ், கருடன் வெற்றிப்படங்களின் இயக்குனர் துரை செந்தில்குமார் சரவணனின் அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்றது. இருவர் உள்ளம் படத்தில் அறிமுகமான பாய்ல் ராஜ்புத் நாயகியாக நடிக்கிறார். ஆண்ட்ரியா, சாம் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
துரை செந்தில்குமார் இயக்கம் என்பதால் லெஜண்ட் சரவணனின் இரண்டாவது படத்திற்கு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.