ஆதரவற்றோருக்கு உதவும் KPY பாலா.. விபத்தில் பார்வை இழந்த சிறுவனுக்கு பண உதவியளித்த பாலா

 
KPY Bala

விபத்தில் பார்வையை இழந்த மாதேஸ்வரன் என்ற சிறுவனின் வீட்டிற்கு சென்று சிகிச்சைக்கு நிதி கொடுத்து நடிகர் பாலா உதவி செய்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் நடந்த ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சின் மூலம் பிரபலமானவர் பாலா. இவர் 6வது சீசனில் கலந்து கொண்டு டைட்டில் பட்டத்தையும் பெற்று இருக்கிறார். பல காமெடி ஷோக்களில் கலந்து கொண்ட பாலாவுக்கு, குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெரிய பிரேக் கொடுத்தது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்தார் பாலா. இதனைத் தொடர்ந்து, தும்பா, காக்டைல், ஜூங்கா, புலிப்பாண்டி உள்ளிட்ட படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது சில ஷோக்களை ஆங்கரிங் செய்து வருகிறார். 

இவரை காமெடி செய்யும் நபராகவே பலருக்கு தெரியும். ஆனால் இவர் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு அறக்கட்டளையை வைத்து அதில் நிறைய பேருக்கு உதவி வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வந்த மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1,000 வழங்கினார். 

KPY Bala

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். பின்பு தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்திற்கு ஆம்புலன்ஸ், பின்பு மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் என வழங்கினார். சமீபத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்து உதவினார். 

இதனைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் இனைந்து திருவண்ணாமலை இரும்பேடு மேனிலைப்பள்ளியில் கழிப்பறை இன்றி சிரமப்பட்ட மாணவர்களுக்கு கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இதையடுத்து இருவரும் இணைந்து கணவரை இழந்த பெண்மணிக்கு ஆட்டோ வாங்கி பரிசாக கொடுத்துள்ளனர். இப்பொழுது பார்வை இழந்த சிறுவன் ஒருவனுக்கு மருத்துவ சிகிச்சைக்காக பணம் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக பாலா வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “மாதேஸ்வரன் என்ற சிறுவன் சிறு வயதிலேயே ஒரு விபத்தில் கண்பார்வையை இழந்துவிட்டான். 

அவருடைய அப்பா ராஜமாணிக்கம் சிறுவனின் அறுவை சிகிச்சைக்கு பணம் வைத்திருக்கவில்லை. மருத்துவர்களும் பணம் இருந்தால் அச்சிறுவனுக்கு பார்வை கொண்டு வந்துவிடலாம் என கூறியுள்ளனர். அது என்னை பாதித்து விட்டது. அதனால் நானும் என்னுடைய ரோல் மாடல் லாரன்ஸ் மாஸ்டரும் இணைந்து அறுவை சிகிச்சைக்கான பணத்தை ஆளுக்கு சரி பாதியாக கொடுத்து உதவினோம்” என குறிப்பிட்டுள்ளார். 

From around the web