உதயநிதி ஸ்டாலினை சந்தித்த கார்த்தி! நிவாரணத் தொகை எவ்வளவு தெரியுமா?
ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்ட மக்களின் இயல்புநிலையை புரட்டிப் போட்டுள்ளது. வெள்ள நீர் புகுந்து வீடுகள், கால்நடைகள், பொருட்கள் என இழப்புகள் பெருமளவில் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சரின் 2000 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால நிவாரணத் தொகைக் கோரிக்கையை அடுத்து 944 கோடி ரூபாயை ஒன்றிய அரசு அளித்துள்ளது. புயல் வெள்ளப் பாதிப்புகளை ஒன்றியக் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சரின் நிவாரண நிதியாக ரூபாய் 15 லட்சத்திற்கான காசோலையை நடிகர் கார்த்தி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கியுள்ளார். இது குறித்து உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை, 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப்பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ நடிகரும் உழவர் அறக்கட்டளை அமைப்பின் நிறுவனருமான சகோதரர் கார்த்தி அவர்கள் ரூபாய் 15 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.” என்று குறிப்பிட்டுள்ளார் உதயநிதி ஸ்டாலின்