சம்மரில் மிரட்ட வரும் காஞ்சனா 4.. சம்பவம் செய்ய தயாராகும் ராகவா லாரன்ஸ்!
காஞ்சனா 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2007-ல் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான ‘முனி’ திரைப்படம் அவருக்கு மிக முக்கிய படமாக மாறியது. ராகவா லாரன்ஸ், ராஜ்கிரண், வேதிகா, வினுச்சக்கரவர்த்தி மற்றும் கோவை சரளா உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடித்தனர். அதன் பின்னர் காஞ்சனா படத்தை 2011-ம் ஆண்டு ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்தார். அந்த படத்தில் ஃபிளாஷ்பேக் போர்ஷனில் திருநங்கையாக சரத்குமார் நடித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அதை மாற்றினார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் காஞ்சனா படத்தை வெளியிட்டது.
காஞ்சனா 2 மற்றும் 3ம் பாகங்களை ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இந்நிலையில், காஞ்சனா 4 படத்தை உருவாக்க முடிவெடுத்துள்ள ராகவா லாரன்ஸ் இந்த முறை சன் பிக்சர்ஸ் உடன் இணையப் போவதில்லை என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கி நடித்த அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் அதிகபட்சமாக 100 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்துள்ளது. மீண்டும் சினிமா ரசிகர்கள் காமெடி பேய் படங்களுக்கு ஆதரவு கொடுப்பதை தொடர்ந்து, தற்போது காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்கும் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ்.
#Kanchana4 - A Film By Raghava Lawrence pic.twitter.com/86r33jNdq4
— Aakashavaani (@TheAakashavaani) June 6, 2024
அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த திரைப்படமும் முதல் மூன்று படங்களை போல திகில் மற்றும் காமெடி பாணியில் எடுக்கப்படவுள்ளது. இதற்கானப் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி தானே தயாரிக்கவும் உள்ளார்.