கமல் ஹாசனின் ’தக் லைஃப்’ மொழி அரசியல் பேச்சு!!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசனின் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஜூன் மாதம் திரைக்கு வர உள்ளது தக் லைஃப் திரைப்படம். சிம்பு, த்ரிஷா, அபிராமி, மலையாள நடிகர் ஜோஜு நடித்துள்ளனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறதால், அனைத்து மொழிகளைச் சார்ந்த பத்திரிக்கையாளர்கள், தொலைக்காட்சி செய்தியாளர்கள் விழாவுக்கு வந்திருந்தனர். பல்மொழி செய்தியாளர்களும் வந்திருப்பதால் விழாவில் பேசுபவர்கள் ஆங்கிலத்தில் பேசுமாறு நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டுக் கொண்டார்.
முன்னதாகப் பேசிய த்ரிஷா ஆங்கிலமும் தமிழும் கலந்து பேசினார். சென்னையில் நடப்பதால் தமிழில் பேசாமல் இருக்க முடியாது என்று த்ரிஷா குறிப்பிட்டார்.
கமல் ஹாசனை பேச அழைத்தது, உயிரே உறவே தமிழே என்று தொடங்கி இதை நான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தால் சரியாக இருக்காது என்று கூறி இந்தியாவின் தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பேசுகிறேன் என்று சொன்னார். கமல் இப்படிச் சொன்னதும் அரங்கத்தில் ஆரவாரம் எழுந்தது. உடனடியாக இது அரசியல் கிடையாது என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கமல்.
ஒன்றிய பாஜக அரசு ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை நாடு முழுவதும் திணிப்பதற்கு முயற்சி செய்யும் இந்த வேளையில், தான் ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதி என்பதை கிடைத்த மேடையில் ’ இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்” என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவிட்டார் கமல் ஹாசன்.
விரைவில் மாநிலங்களவை உறுப்பினராக டெல்லி செல்ல உள்ள கமல்ஹாசன், பாராளுமன்றத்திலும் இதே குரலில் ஒலிப்பார் என்று நம்பலாம்.