சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் ஜெய்பீம் இயக்குநர்! லைகா கொடுத்த மாஸ் அப்டேட்!!

 
Rajini

நடிகர் ரஜினிகாந்தின் 170வது படம் குறித்த தகவலை லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது.

‘பீஸ்ட்’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். இது அவருக்கு 169-வது படமாகும்.

இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 170வது படத்தை இயக்குநர் ஞானவேல் இயக்குகிறார். ‘ஜெய்பீம்’ பட இயக்குநர் ஞானவேல், ரஜினிகாந்தின் 170வது படத்தை இயக்க உள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Rajini

இது குறித்து லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “லைகா குழுமத் தலைவர் சுபாஸ்கரன் பிறந்தநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தலைவர் 170’ திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.


இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் அனிரூத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரோடக்‌ஷன்ஸ் தலைமை பொறுப்பாளர் வி.கே.எம் தமிழ் குமரன் தலைமையில் ‘#தலைவர் 170’ திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web