நெல்சனுக்கு அடித்த ஜாக்பார்ட்.. போர்ஷே மசான் காரை பரிசாக வழங்கிய கலாநிதி மாறன்.!!

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சனுக்கு போர்ஷே மசான் காரை கலாநிதி மாறன் பரிசாக வழங்கியுள்ளார்.
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் திலிப்குமார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்கினார். இதில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், மலையாள மெகா ஸ்டார் மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், சரவணன், யோகி பாபு, விநாயகன், ரெட்டின் கிங்ஸ்லி என பலர் நடித்து உள்ளனர்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளது. கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம் மெகா ஹிட்டாகி உள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை இப்படம் பெற்று இருக்கிறது. இந்த திரைப்படம் முதல் நாளில் 90 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அதேபோல் இந்தப் படம் முதல் வார முடிவில் 402 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.
இதுவரை எந்த ஒரு திரைப்படமும் ஒரே வாரத்தில் ரூ.400 கோடி வசூலை தாண்டியதில்லை. அந்த வகையில் முதன்முறையாக ஒரு வாரத்தில் ரூ.402 கோடி வசூல் செய்து ஜெயிலர் சாதனை படைத்தது. இதுவரை இந்த படம் ரூ. 525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில், ஜெயிலர் படம் வெற்றி பெற்றதை அடுத்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து இருக்கிறார். மேலும் அவரிடம் காசோலை அளித்து பாராட்டு தெரிவித்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிக்கு பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரை பரிசாக வழங்கியுள்ளார் கலாநிதி மாறன்.
அதனைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலிப் குமாருக்கும் சன் பிக்சர்ஸ் சார்பில் மிக மிக விலையுயர்ந்த காரை பரிசாக வழங்கி கலாநிதி மாறன் ஆச்சரியப்படுத்தி இருக்கின்றார். நெல்சனுக்கு புத்தம் புதிய போர்ஷே சொகுசு காரே பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
To celebrate the grand success of #Jailer, Mr.Kalanithi Maran presented the key of a brand new Porsche car to @Nelsondilpkumar #JailerSuccessCelebrations pic.twitter.com/kHTzEtnChr
— Sun Pictures (@sunpictures) September 1, 2023
சென்னையில் உள்ள சன் டிவி அலுவலகத்தில் வைத்தே அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டு இருக்கின்றது. சொகுசு காரை கலாநிதி மாறனே நேரடியாக அவருக்கு வழங்கி, வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கின்றார். மூன்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டு அதில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும்படி அவரிடம் கூறப்பட்டு இருக்கின்றது.
பிஎம்டபிள்யூ மற்றும் போர்ஷே என பல நிறுவனங்களின் சொகுசு கார்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அதில், அவர் போர்ஷே சொகுசு காரையே தேர்வு செய்திருக்கின்றார். முகப்பு பகுதியை வைத்து பார்க்கையில் அது போர்ஷே மசான் (Porsche macan) மாடலை போல் தெரிகின்றது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.