ஜவான் பட காட்சிகள் லீக்... டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

ஜவான் படத்தின் காட்சிகளை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அட்லி இயக்கத்தில் பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் ‘ஜவான்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் விஜய் சேதுபதி, சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜூன் 2-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது. ரெட் சில்லீஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
ஜவான் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் காத்திருந்த வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் காட்சிகள் இணையத்தில் லீக்காகியுள்ளது. சிகரெட் பிடித்தபடியும் பெல்ட்டை சுழற்றியபடியும் ஷாருக்கான் சண்டை போடும் இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தயாரிப்பு நிறுவனம், நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்த்து. அந்த மனுவில் ஜவான் படத்தின் முக்கிய சண்டை காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. அந்த காட்சியை உடனடியாக அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி. ஹரி ஷங்கர் தலைமையிலான டெல்லி உயர்நீதிமன்ற அமர்வு, யூடியூப், கூகுள், ட்விட்டர் மற்றும் ரெட்டிட் போன்ற சமூக வலைதளங்களுக்கு உத்தரவு பிறப்பித்து, படத்தின் காப்புரிமை பெற்ற உள்ளடக்கத்தின் புழக்கத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது. மேலும் அனைத்து இணையதளங்களில் இருந்தும் நீக்க நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.