கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல.. கவனம் ஈர்க்கும் நடிகர் ராஜ்கிரணின் பதிவு

 
Rajkiran

நடிகர் ராஜ்கிரண் ஃபேஸ்புக்கில் இஸ்லாமியர்கள் குறித்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

1989-ல் வெளியான ‘என்ன பெத்த ராசா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமானவர் ராஜ்கிரண். அதனை தொடர்ந்து 1991-ல் வெளியான ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பின்னர் தொடர்ந்து கிராமிய படங்களில் ஹீரோவாக நடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தார்.

அதன்படி அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியரே ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ள அவர், திரையுலகில் குணசித்திர நடிகராகவும் கவனம் ஈர்த்தார். கடைசியாக இவரது நடிப்பில் கடந்த  ஆண்டு பட்டத்து அரசன், விருமன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்தன. மேலும் நீண்ட நாளுக்கு பின் தனுஷ் இயக்கத்தில் பவர் பாண்டி என்ற படத்தில் ஹீரோவாக நடித்தது குறிப்பிடதக்கது.

Rajkiran

இந்த நிலையில் நடிகர் ராஜ்கிரன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் இஸ்லாமியர்களும் அவர்களின் மத மாண்பு குறித்தும் பதிவிட்டிருந்தார்.

அந்த பதிவில், “இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு அநீதிகள் இழைக்கப்பட்டாலும், எவ்வளவு வன்மத்தோடு அக்கிரமங்களுக்கு ஆட்படுத்தப்பட்டாலும், அவர்கள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, தங்களால் முடிந்த உதவிகளை பிற சமுதாயத்தினருக்கும் செய்துகொண்டு, அமைதியாக வாழ்ந்து கொண்டிருப்பதற்கு காரணம், இயலாமையோ, கோழைத்தனமோ அல்லது உயிருக்கு பயந்தோ அல்ல...

‘இறப்பதற்காகவே பிறந்திருக்கிறோம். இறை வழியில் மரணத்தை நேசிக்கிறோம் என்ற கொள்கையினால்’ பொறுமை காக்க வேண்டும் என்று இறைவனின் இறுதி தூதுவர், இஸ்லாமிய மக்களின் மாபெரும் தலைவர், நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கையையும், வார்த்தைகளையும் பின்பற்றுவதால், பொறுமையைவிட சிறந்த பொக்கிஷம் இல்லை என்று பொறுமை காக்கிறோம். இந்தப் பொறுமையை தவறாகப் புரிந்துகொண்டு கண்டவர்கள் பேச ஆரம்பித்தால், அதன் விளைவு மிக மோசமாயிருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. முன்னதாக, மணிப்பூர் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் தலைமை வகித்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையாகின. இந்தப் பின்னணியில் ராஜ்கிரணின் பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.

From around the web