இட்லி கடை க்கும் பவர் பாண்டி க்கும் தொடர்பு உண்டா? ஃபர்ஸ்ட் லுக் அவுட்!!
தனுஷ் எழுதி இயக்கி நடிக்கும் இட்லி கடை படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் இரு கைகளிலும் தூக்குப் பாத்திரங்களை சுமந்த படி வேட்டி, சட்டை துண்டுடன் நடுத்தர வயது தனுஷ் இருப்பது போன்ற காட்சி உள்ளது. பின்னணில் ஒரு ஓலைக் குடிசை வீடு இருக்கிறது.
இன்னொரு படத்தில் ராஜ்கிரண் வேட்டி சட்டை துண்டுடன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். அருகே இள வயது தனுஷ் பேண்ட் ஷர்ட் போட்டு நெற்றியில் திருநீறுடன் பவ்யமாக நின்று கொண்டிருக்கிறார். தனுஷ் தோளில் ராஜ்கிரண் கையைப் போட்டுக் கொண்டுள்ளார்.
இந்த இரு படங்களையும் பார்க்கும் போது ராஜ்கிரணும் தனுஷும் அப்பா மகன் வேடங்களில் நடித்துள்ளது போல் தெரிகிறது. வசதியாக வாழ்ந்த தனுஷ், தந்தைக்குப் பிறகு கஷ்டப்படுவதால் ஓலைக் குடிசை வீட்டுக்கு மாறி இட்லி கடை நடத்தி வாழ்க்கையை ஓட்டுகிறாரோ என்று தோன்றுகிறது. இந்த பின்னணியில் வில்லன், காதல், மோதல் என கிராமப்புற காட்சிகள் இருக்கலாம்.
பவர் பாண்டியில் இளவயது ராஜ்கிரணாக தனுஷ் நடித்து இருப்பார். முதியவர் ராஜ்கிரணுக்கு நன்கு படித்து நகரத்தில் வேலை பார்க்கும் மகன் இருப்பார். நகரப்புற மகனுக்குப் பதிலாக படிக்காத கிராமத்து மகன் கதாப்பாத்திரமாக மாற்றி கதை எழுதியிருப்பாரோ தனுஷ் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
இருவரின் காம்பினேஷனில் தனுஷ் இயக்கிய முதல் படமான பவர் பாண்டி போல் இட்லி கடையும் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.