சின்னத்திரை நடிகைக்கு மீண்டும் திருமணமா..? வீடியோ மூலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேஷ்மா!

பிரபல சின்னத்திரை நடிகை ரேஷ்மாவுக்கு மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
2009-ல் மா டிவியில் ஒளிபரப்பான ‘லவ்’ தெலுங்கு தொடர் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அதன்பின், சன் டிவியில் ஒளிபரப்பான ‘வம்சம்’ தொடர் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து வாணி ராணி, மரகத வீணை உள்ளிட்ட நாடகங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாக்கியலட்சுமி’ மற்றும் ஜீ டிவியில் ஒளிபரப்பாகும் ‘சீதா ராமன்’ சீரியலில் நடித்து வருகிறார்.
இதனிடையே 2015-ல் வெளியான ‘மசாலா படம்’ என்ற தமிழ் படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ‘வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து சில படங்களிலும் நடித்துள்ளார்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் நரேனுடன் இணைந்து தான் எடுத்துக் கொண்ட திருமண போட்டோ ஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ரேஷ்மா பதிவிட்டு இருந்தார். ஆனால் ஏற்கனவே இதே புகைப்படங்களை நடிகர் நரேனும் முன்பு தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதே புகைப்படத்தை இப்போது ரேஷ்மாவும் பதிவு செய்ததால் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக சோசியல் மீடியாவில் வாழ்த்து சொல்லத் தொடங்கினார்கள்.
இந்நிலையில் ரேஷ்மா ஒரு வீடியோ மூலம் அதற்கு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், தான் 3 விஷயங்கள் குறித்து பேசுகிறேன் என்றும், பிரைடல் நாளிதழுக்காக தான் அந்த போட்டோ ஷூட் நடத்தினேன் என்றும், அதுவும் ஒரு வருடத்திற்கு முன் எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். 3.33 படத்தை ஆஹா தமிழில் காணுங்கள், தனது அடுத்த படமான சத்ய சோதனை வரும் ஜூலை 21ம் தேதி வெளியாக இருக்கிறது என பதிவு செய்துள்ளார். இதன் காரணமாக இந்த போட்டோசூட் குறித்து வெளியான வதந்திகள் முடிவுக்கு வந்துள்ளது.