ஜனநாயகன் படத்திற்கு தடை? தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை!!
விஜய் நடிப்பில் வெளிவர உள்ள கடைசிப்படமான ஜனநாயகன் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சமூக செயற்பாட்டாளரும் அரசியல் விமர்சகருமான சூர்யா சேவியர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து , ”ஜனநாயகன் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள திரைப்படத்தை ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் இருக்கிறது. இப்படத்தை தமிழ்நாட்டில் ஜனவரியில் திரையிட அனுமதிக்கக்கூடாது.
தவெக நடவடிக்கைகள் அனைத்தும் கட்டுப்பாடற்றதாகவே இருக்கிறது. இது சாதாரண ஒரு கலைப்படைப்பு என்று கடந்துவிடமுடியாது.
தேர்தலை மனதில் வைத்து எடுக்கப்பட்ட படமாதலால் திட்டமிட்ட வன்முறைகள் நிகழ வாய்ப்பிருக்கிறது. திரையரங்கள் சூறையாடப்படலாம்.
ரோகிணி திரையரங்கம் சூறையாடப்பட்டதை மறந்துவிடக்கூடாது. படம் பார்க்க வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்காது.
திரையரங்கில் பல தரப்பினரும் வர வாய்ப்பிருப்பதால் ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் என ஒரே இடத்தில் கூடி, மோசமான சூழல் உருவாகலாம். தமிழ்நாடு முழுமையும் ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு தியேட்டருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளித்துக் கொண்டிருப்பது இயலாத காரியம்.
எனவே சட்டமன்றத்தேர்தல் முடிந்த பிறகு மேமாதம் திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கலாம். தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியாளர்களுக்கு தவெக நடவடிக்கைகள் துணை போவதாக கரூர் உள்ளிட்ட சம்பவங்கள் மெய்ப்பிப்பதாக கருதமுடிகிறது.
ஜனநாயகன் என்பதை விட பிணநாயகன் என்ற கருத்தும் மேலோங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.” என்று சூர்யா சேவியர் கூறியுள்ளார்.
ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளீயீடு மலேசியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
