படப்பிடிப்பின் போது காலில் காயம்... நடிகருக்கு இன்று அறுவை சிகிச்சை!
படப்பிடிப்பின் போது நடிகர் பிருத்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்ட நிலையில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
2002-ல் வெளியான ‘நந்தனம்’ படத்தின் மூலம் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் பிரித்விராஜ். அதை தொடர்ந்து புதிய முகம், போக்கிரி ராஜா, அன்வர், உருமி உள்ளிட்ட 60க்கும் மேல் மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனிடையே 2005-ல் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியான ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது வசந்தபாலன் இயக்கும் காவிய தலைவன் என்ற திரைப்படத்தில் நடிகர் சித்தார்த் உடன் இணைத்து நடித்து வருகிறார். இதனிடையே, ஜெயன் நம்பியார் இயக்கத்தில் ‘விலாயத் புத்தா’ என்ற படத்தில் பிருத்விராஜ் நடித்து வருகிறார்.
ஜி.ஆர்.இந்துகோபன் எழுதிய பிரபலமான நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இதில் ‘டபுள் மோகனன்’ என்ற கடத்தல்காரராக பிருத்விராஜ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் உள்ள மறையூர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் பிருத்விராஜுக்கு காலில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (ஜூன் 26) அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.
அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் சில வாரங்கள் ஓய்வில் இருப்பார் என்றும், முழுமையாக குணமடைந்த பிறகே படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. ‘விலாயத் புத்தா’ தவிர்த்து ‘பிரபாஸ்’ நடிக்கும் ‘சலார்’, ’ஆடுஜீவிதம்’ உள்ளிட்ட படங்களிலும் பிருத்விராஜ் கவனம் செலுத்தி வருகிறார்.