இந்தியாவின் மதிப்பு வாய்ந்த பிரபலம்... விராட் கோலி இரண்டாம் இடம்... முதல் இடத்தை தட்டி பறித்த ரன்வீர் சிங்!!

 
RanvirSingh - kohli

2022-ம் ஆண்டுக்கான இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலத்துக்கான பட்டியலில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரன்வீர் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார்.

கார்பரேட் முதலீடு மற்றும் அபாய ஆலோசனை நிறுவனமான குரோல் (Kroll) ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலம் யார் என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது. விளையாடு, சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள பிரபலங்களின் பிராண்டு மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 

அதன்படி, 2022-ம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், பாலிவுட் பிரபலமான ரன்வீர் சிங் முதலிடம் பிடித்துள்ளார். நீண்ட காலமாகவே இந்த பட்டியலில் முதலிடத்தில் இருந்த விராட் கோலியை தற்போது ரன்வீர் சிங் பின்னுக்குத் தள்ளியுள்ளார். ரன்வீர் சிங்கின் தற்போதைய பிராண்டு மதிப்பு 181.7 மில்லியன் டாலராக உள்ளது. அதேநேரம், விராட் கோலியின் பிராண்டு மதிப்பு 176.9 மில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. முன்னதாக 2020ஆம் ஆண்டில் விராட் கோலியின் பிராண்டு மதிப்பு 237 மில்லியன் டாலராக இருந்தது.

Ranveer

விராட் கோலியைப் பொறுத்தவரையில், இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் கிரிக்கெட் வீரர்களில் தலைசிறந்த வீரராக இருக்கிறார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகள் அவருக்கு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, சதம் அடிக்க முடியாமல் திணறுவது என அவர் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தார். இதனால் அவரது விளம்பர வாய்ப்புகளும் குறைந்து பிராண்டு மதிப்பும் சரியத் தொடங்கியது.

இதுபோன்ற காரணங்களால்தான் 2022-ம் ஆண்டுக்கான பட்டியலில் தனது முதலிடத்தை ரன்வீர் சிங்கிடம் இழந்துள்ளார் விராட் கோலி. இந்தப் பட்டியலில் 3-ம் இடத்தில் இருப்பவர் நடிகர் அக்‌ஷய் குமார். அவரது பிராண்டு மதிப்பு 153.6 மில்லியன் டாலராக உள்ளது. நான்காம் இடத்தில் 102.9 மில்லியன் டாலர் மதிப்புடன் ஆலியா பட்டும், ஐந்தாம் இடத்தில் 82.9 மில்லியன் டாலர் மதிப்புடன் தீபிகா படுகோனும் உள்ளனர்.

Kholi

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தப் பட்டியலில் ஆறாம் இடத்தில் இருக்கிறார். அவரது பிராண்டு மதிப்பு 80 மில்லியன் டாலராக உள்ளது. கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் பிராண்டு மதிப்பு 73.6 மில்லியன் டாலராக இருப்பதால் அவர் பட்டியலில் எட்டாம் இடத்தில் இருக்கிறார். அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், ஷாருக்கான் ஆகியோரும் டாப் 10 இடங்களுக்குள் உள்ளனர்.

From around the web