நான் மன்னிப்பு கேட்குற ஜாதி இல்ல.. மன்சூர் அலிகான் மீண்டும் சர்ச்சை!!
நான் தவறாக பேசவில்லை என்றும், நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் நடிகர் மன்சூர் அலிகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
1990-ல் வெளியான ‘வேலை கிடைச்சுடுச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மன்சூர் அலிகான். அதனைத் தொடர்ந்து 1991-ல் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் மிகவும் பிரலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, பல முன்னணி நடிகர்களுடன் கொடூர வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் மன்சூர் அலிகான். வில்லத்தனமான நடிப்பிற்கு புகழ்பெற்ற மன்சூர் அலிகான், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இதன் வெளிப்பாடாக, நடிகர் விஜயின் லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானை லோகேஷ் நடிக்க வைத்தார்.
இந்த நிலையில் லியோ படம் தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லியோ படத்தில் பலாத்கார காட்சியே தனக்கு கிடைக்கவில்லை என பிறர் முகம் சுழிக்க வைக்கும் தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார். இதில் திரிஷா பெயரை பயன்படுத்தி கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த நடிகை த்ரிஷா, இதற்கு தனது கண்டனங்களை தெரிவித்தார்.
தொடர்ந்து இந்த சர்ச்சை பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மன்சூர் அலிகான் ஏற்கனவே இதற்கு அலட்சியமாக விளக்கம் அளித்திருந்தார். தொடர்ந்து நேற்று தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், நான் த்ரிஷா குறித்து தவறாக எதுவும் கூறவில்லை. சர்ச்சை பேச்சு வீடியோ குறித்து என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார். நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது. கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். என்னை கருப்பு ஆடாக காட்டிவிட்டு நடிகர் சங்கம் நல்ல பேர் எடுத்து கொள்கிறார்கள். நான் நடிகர் சங்கத்திற்கு போன் செய்த போதும் யாரும் எடுக்கவில்லை. இது தொடர்பாக நான் நிச்சயம் வழக்கு தொடர்வேன்.
மேலும் என்னை அவமானப் படுத்திவிட்டார்கள் என்று கூறிய அவர் நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், நான் மன்னிப்புக் கேட்கக் கூடிய ஜாதியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எரிமலை குமுறினால் எல்லோரும் துண்டைக்கானோம், துணியகாணோம் என ஓடிப்போய் விடுவீர்கள் என தெரிவித்துள்ளார்.