இந்த ஜென்மத்தில் அவருடன் சேரமாட்டேன்.. SK மீது கடும் கோபத்தில் டி.இமான்!

நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாகவும், இந்த ஜென்மத்தில் அவரது படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்றும் இசையமைப்பாளர் டி.இமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கி, பின்னர் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியவர் சிவகார்த்திகேயன். இவர் 2012-ம் ஆண்டு வெளியான மெரினா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து, மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மான் கராத்தே, எதிர்நீச்சல், ரஜினிமுருகன், ரெமோ, வேலைக்காரன், கனா, ஹீரோ, டாக்டர், பிரின்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கு அவரது படங்கள் எந்த அளவுக்கு உறுதுணையாக இருந்ததோ, அதில் இடம்பெற்ற பாடல்கள் ஹிட் ஆனதும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் பெரும்பாலானவற்றிற்கு அனிருத் அல்லது டி இமான் தான் இசையமைத்து இருப்பார்கள். குறிப்பாக சிவகார்த்திகேயன் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில் அவரின் படங்களுக்கு தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து அவரை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு சென்ற பெருமை இசையமைப்பாளர் டி.இமானையே சேரும்.
இந்த நிலையில், தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இசையமைப்பாளர் டி.இமான் நடிகர் சிவகார்த்திகேயன் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தனிப்பட்ட காரணங்களால் இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து பயணிப்பது கடினம். அவர் எனக்கு செய்தது ஒரு மிகப்பெரிய துரோகம். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. எனவே எதிர்காலத்தில் அவருடன் சேர்ந்து பயணிக்க இயலாது. ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் நானும் இசையமைப்பாளராக இருந்து, அவரும் நடிகராக இருந்தால் நடக்க வாய்ப்புள்ளது. இது நான் மிகவும் கவனத்துடன் எடுத்த முடிவு. அந்த துரோகத்தை நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்து கொண்டேன். இது குறித்து அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். ஆனால் அதற்கான அவரது பதிலை என்னால் சொல்லமுடியாது” என்று கூறியுள்ளார்.
"இனி ஜென்மத்துக்கும் #சிவகார்த்திகேயன் கூட படம் பண்ணமாட்டேன்" 😳
— Second Show (@SecondShowTamil) October 16, 2023
- இசையமைப்பாளர் டி.இமான் pic.twitter.com/lOwT8d7pcg
2013-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘ஊதாக் கலரு ரிப்பன்’ உள்ளிட்ட அனைத்துப் பாடல்களும் சூப்பர்ஹிட் ஆகின. தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினிமுருகன்’, ‘சீமராஜா’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ உள்ளிட்ட படங்களுக்கு டி,இமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்றனர். ‘சீமராஜா’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயன் - டி.இமான் கூட்டணி மீண்டும் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.