தகுதியே இல்லனு சொன்னாங்க.. இசை வெளியீட்டு விழாவில் குமுறிய வடிவேலு!

 
chandramukhi 2

சினிமாவில் நடிக்குற தகுதியே இல்லனு சொன்னாங்க என நடிகர் வடிவேலு இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

கடந்த 2005-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான படம் ‘சந்திரமுகி’. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘சந்திரமுகி’ பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில் ஓடிய திரைப்படம் என்ற பெருமையையும், அதிக வசூலை குவித்த படம் என்ற பெருமையையும் படம் பெற்றது.

இந்த நிலையில், தற்போது இதன் இரண்டாம் பாகம் பி.வாசு இயக்கத்தில் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, ராதிகா, மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்ற எம்.எம்.கீரவாணி இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.

லைகா நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில், ஆர்.ஜி.ராஜசேகர் ஒளிப்பதிவில், தோட்டா தரணி கலை இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே செய்திகள் கசிந்த நிலையில் தற்போது விநாயகர் சதுர்த்தி விருந்தாக வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Chandramukhi 2

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் அமைந்திருக்கும் தனியார் பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் பிரம்மாண்டமாக நேற்று  நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினருடன் தயாரிப்பாளர் லைக்கா சுபாஷ்கரன், பிரேமா சுபாஷ்கரன், சுபாஷ்கரனின் தாயார் ஞானாம்பிகை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

‘சந்திரமுகி 2’ இசை வெளியீட்டு விழாவில், தன்னுடைய மன குமுறலை வெளிப்படுத்தும் விதத்தில் நடிகர் வடிவேலு பேசியுள்ளார். இசை வெளியீட்டு விழாவில் வடிவேலு பேசியதாவது, “ரசிகர்களாகிய உங்களையெல்லாம் பார்க்கும் போது மனதில் இருக்கும் வேதனைகளும், கஷ்டங்களும் பஞ்சாகப் பறந்து போகும். உங்களைப் பார்ப்பது தான் எங்களுக்கு சந்தோஷம். உங்களை சந்தோஷப்படுத்துவது தான் எங்களுக்கு சந்தோஷம். ரசிகர்களாகிய நீங்கள் இல்லை என்றால் கலைஞர்களாகிய நாங்கள் இல்லை.

நான் நடித்த மாமன்னன் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு அதைவிட பெரிய வெற்றி படம் சந்திரமுகி 2. இந்த இரண்டு படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அந்தப் படத்துல பார்த்த வடிவேலு இந்த படத்தில் இருக்க மாட்டாரு. இந்த படத்துல பார்க்க போற வடிவேலு வேற எந்த படத்திலும் இருக்க மாட்டாருனு. முதல்ல ஒரு விசயத்தை சொல்லிடுறேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடி என்ன வரவிடாம கதவை பூட்டு போட்டு சாவிய தூக்கிட்டு போயிட்டாங்க. உனக்கு சினிமாவில் நடிக்கிறதுக்கு தகுதியே இல்லன்னாங்க. அதுக்கு என்ன காரணம்கிறது எல்லாருக்கும் தெரியும்.

அந்தக் கதவை உடைத்து புது சாவிய கொடுத்து வாழ்க்கையை தொடங்கி வைத்தவர் எங்க அண்ணன் சுபாஷ்கரன். நான் குலதெய்வமா கும்பிடுவது அய்யனாரு, கருப்பன். அந்த ரெண்டு தெய்வத்துக்கு பிறகு தெய்வமா நான் அண்ணன் சுபாஷ்காரன தான் வணங்குறேன். யாரு என்ன சொன்னாலும்.. என்ன மறுபடியும் சினிமால நடிக்க வைத்தவர் அண்ணன் சுபாஷ்கரன் தான். இதற்கு அன்புத்தம்பி தமிழ் குமரன் ரொம்ப உதவியா இருந்தாரு.

chandramukhi 2

மாமன்னன் படத்த முடித்த பிறகு பெரிய டைரக்டரரான பி. வாசு சார் என்னை கூப்பிட்டார். அவர் படத்துல நிறைய கேரக்டர்ல நடிச்சிருக்கேன். அவருக்கு இப்போ 70 வயசு ஆகுது. வயசு தான் 70 ஆவது தவிர 35 வயசு மாதிரி இருக்காரு. என்னை ஒரு ஹோட்டலுக்கு வரவழைச்சி, சந்திரமுகி 2 படத்தின் கதையை மூன்று மணி நேரம் சொன்னார். பொதுவா வாசு சார் யாரிடமும் கதை சொல்ல மாட்டார். ஒன் லைனை மட்டும்தான் சொல்வார்.

இதுவரைக்கும் அவர் அப்படி என்னிடம் கதை சொன்னதேயில்லை. அந்தக் கதையைக் கேட்டு அப்படி ஆடிப் போய்விட்டேன். அப்புறம் இதனை நான் தமிழ் குமரனிடம் சொல்ல.. அவர் சுபாஷ்கரனிடம் சொல்ல.. சுபாஷ்கரன் இதற்காகவே லண்டனிலிருந்து சென்னைக்கு வந்து கதையை கேட்டு ஓகே சொல்லி தொடங்கப்பட்ட படம் தான் சந்திரமுகி 2. சந்திரமுகி முதல் பாகத்தில் வந்த முருகேசனாகத்தான் இந்த இரண்டாம் பாகத்திலும் நடித்திருக்கிறேன். இந்த முருகேசன் என்ன பாடு படுகிறார் என்பதனை படத்தில் பார்த்து ரசிக்கலாம். குரூப்பு மாறிடுச்சு.‌

இந்தப் படத்தில் நடித்ததற்காக நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அனைவரும் கூட்டாக இணைந்து கஷ்டப்பட்டு உழைச்சிருக்காங்க. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படம். அனைவரும் பார்த்து ரசிக்க வேண்டும். வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியான பிறகு படத்தைப் பற்றிய சுவாரசியமான பல விசயங்களை வெற்றி விழாவில் சொல்றேன்” என்றார்.

From around the web