நான் கைது செய்யப்படவில்லை.. நடிகர் மன்சூர் அலிகான் அறிவிப்பு!

 
Mansoor Alikhan

நான் கைது செய்யப்பட்டதாக வெளியாகும் தகவல் தவறானது என நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

1990-ல் வெளியான ‘வேலை கிடைச்சுடுச்சு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மன்சூர் அலிகான். அதனைத் தொடர்ந்து 1991-ல் வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தின் மூலம் மிகவும் பிரலமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களை இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, பல முன்னணி நடிகர்களுடன் கொடூர வில்லனாக நடித்து கவனம் பெற்றவர் மன்சூர் அலிகான். வில்லத்தனமான நடிப்பிற்கு புகழ்பெற்ற மன்சூர் அலிகான், தனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். இதன் வெளிப்பாடாக, நடிகர் விஜயின் லியோ படத்தில் இருதயராஜ் என்ற கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகானை லோகேஷ் நடிக்க வைத்தார்.

Mansoor-Alikhan

இந்த நிலையில் லியோ படம் தொடர்பாக அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், லியோ படத்தில் பலாத்கார காட்சியே தனக்கு கிடைக்கவில்லை என பிறர் முகம் சுழிக்க வைக்கும் தனது மனக் குமுறலை வெளிப்படுத்தினார். இதில் திரிஷா பெயரை பயன்படுத்தி கீழ்த்தரமாக பேசியிருந்தார். இந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நடிகை த்ரிஷா, இதற்கு தனது கண்டனங்களை தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.  இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Mansoor Alikhan

இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு நடிகர் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது.  நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.   மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.

இந்நிலையில், நான் கைது செய்யப்பட்டதாகவும், விசாரணை நடந்து வருவதாகவும் வெளியாகும் தகவல் தவறானது என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், என்னிடம் விசாரணை நடத்தினால் முழு ஒத்துழைப்பு தருவதாகவும். வேண்டுமென்றே என் மீது குற்றம் சாட்டி வருகின்றனர் எனவும் நடிகர் மன்சூர் அலிகான்  தெரிவித்துள்ளார்.

From around the web