2026 சட்டமன்றத் தேர்தலில போட்டியிடுவது உறுதி.. நடிகர் விஷால் பேட்டி

 
Vishal

2026-ல் அரசியல் கட்சி ஆரம்பித்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஷால். இவர் நடிகர் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். 2004-ம் ஆண்டு வெளியான ‘செல்லமே’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு, சிவப்பதிகாரம், தாமிரபரணி, மலைக்கோட்டை, அவன் இவன், துப்பறிவாளன், சண்டைக்கோழி 2 என தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது விஜய் வரிசையில் தனது அரசியல் வருகையை நடிகர் விஷால் இன்று உறுதி செய்தார். வட பழனியில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில், 2026-ல் அரசியல் கட்சியை அறிவிப்பேன் என அதிரடியாக அறிவித்திருக்கிறார்.

Vijay Vishal

பல ஆண்டுகளாகவே சமூக ஆர்வம் மிக்கவராக தனது கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வந்ததில், திரைக்கு அப்பாலும் நடிகர் விஷால் கவனம் ஈர்த்து வந்தார். 6 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை முன்வைத்து விஷால் முன்வைத்த அரசியல் நகர்வுகளும் கணிசமாக கவனிக்கப்பட்டன.

தற்போது தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ள சூழலில், வாக்களிப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார். இதன் மத்தியில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “ஏப்ரல் 19 அன்று 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றது என்ற செய்தியை கேட்க ஆவலுடன் உள்ளேன்” என்று தெரிவித்தார்.


மேலும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக அரசியல் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் விஷால் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் தானும் ஒரு வேட்பாளராக அந்த தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதனையொட்டி கோலிவுட் மற்றும் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பு எழுந்துள்ளது.

முன்னதாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி, வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web