இனி வில்லன் வேடங்களில் நடிக்கப்போவதில்லை.. விஜய் சேதுபதி எடுத்த அதிரடி முடிவு!

 
Vijay Sethupathi Vijay Sethupathi

இனி வில்லன் வேடங்களில் நடிக்க போவதில்லை என முடிவெடுத்துள்ளதாக கோவா சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிசியான நடிகர் என்ற அடையாளத்துடன் வலம் வருபவர் விஜய் சேதுபதி. ஒரே சமயத்தில் கதாநாயகன், வில்லன், குணசித்திர நடிகர், சிறப்பு தோற்றம் என பலவற்றிலும் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து வருகிறார். இவரது நடிப்பு திறமையை மற்றமொழி சினிமாக்காரர்களும், ரசிகர்களும் கூட கொண்டாடி வருகிறார்கள். எளிமையான நடவடிக்கையால் தொடர்ந்து கவனம் ஈர்த்தும் வருகிறார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான விக்ரம் வேதா படத்தின் மூலம் வில்லனாக அவதாரம் எடுத்தார். அப்படத்தில் இவர் நடித்த வில்லன் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனதை தொடர்ந்து ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு விஜய் சேதுபதிக்கு கிடைத்தது. பின்னர் விஜய்க்கு வில்லனாக மாஸ்டர், கமலுக்கு வில்லனாக விக்ரம் என இவர் நெகடிவ் ரோலில் நடித்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால் இவருக்கு தமிழ் மட்டுமின்றி பாலிவுட், டோலிவுட்டில் இருந்தும் வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்தன.

Vijay-Sethupathi

அந்த வகையில் விஜய் சேதுபதி அண்மையில் வில்லனாக நடித்து வெளிவந்த ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் அண்மையில் கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, இனி வில்லனாக நடிக்கப்போவதில்லை எனக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளதாவது, “ஹீரோக்கள் என்னிடம் கேட்டுக்கொண்டதால் தான் நான் பல படங்களில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டேன். நிறைய அழுத்தம் இருப்பதால் இனி வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளேன். வில்லனாக நடிக்கும்போது சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகின்றன. ஹீரோவை விட பவர்புல்லாக தெரிந்துவிடக்கூடாது என்பதற்காகவே பார்த்து பார்த்து நடிக்க வைப்பார்கள்.

Vijay Sethupathi

நான் நடித்த நிறைய காட்சிகள் எடிட்டிங்கில் கட் செய்யப்பட்டு விடுகின்றன. அதனால் சில வருடங்கள் வில்லனாக நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன் என விஜய் சேதுபதி கூறி இருக்கிறார். அவர் ஜவான் படத்துக்கு பின் இந்த கருத்தை கூறி இருப்பதால் ஒருவேளை அவரின் இந்த முடிவுக்கு ஷாருக்கான் தான் காரணமாக இருப்பாரோ என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.

From around the web