என் குழந்தையுடன் ஆனந்தமாக இருக்கிறேன்.. தாய்மை அனுபவம் குறித்து நடிகை இலியானா நெகிழ்ச்சி!
தாய்மை அனுபவம் குறித்து சமூக வலைதளத்தில் நடிகை இலியானா நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ளார்.
2006-ல் வெளியான ‘தேவதாசு’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் இலியானா. அதே ஆண்டு ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘நண்பன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றவர் இலியானா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி சினிமாவில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் இலியானா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய குட்டி டார்லிங்கை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என பதிவிட்டு, சாதனை பயணம் தொடங்கி விட்டது என்ற பொருள் அடங்கிய வாசகம் இடம்பெற்ற குழந்தையின் உடையையும் வெளியிட்டிருந்தார். இலியானாவிற்கு திருமணமாகாத நிலையில் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி மகன் பிறந்ததாக இலியானா தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து கோயா பீனிக்ஸ் டோலன் என பெயர் சூட்டியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தாய்மை குறித்து வலைதளத்தில் இலியானா நெகிழ்ச்சியோடு வெளியிட்டுள்ள பதிவில், “தாய்மையின் இனிமையை நான் முழுமையாக அனுபவிக்கிறேன். இரண்டு மாதங்கள் முடிவடைந்த என் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் துடித்து விட்டேன்.
நம் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லாதபோது அனுபவிக்கும் வேதனையை எப்படி தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை யாரும் கற்றுக்கொடுக்க மாட்டார்கள். எல்லா பெண்களுக்குமே தாயானதும் தானாகவே இதெல்லாம் தெரிந்து விடுகிறது.
காதலன் நான் கஷ்டத்தில் இருந்தபோது தைரியத்தை கொடுத்தார். எனது கண்ணீரைத் துடைத்தார். சிரிக்க வைத்தார். அவர் என் பக்கத்தில் இருந்தால் எதுவும் கஷ்டமாக இருக்காது. தற்போது என் குழந்தையுடன் ஆனந்தமாக இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.