சராசரி நடிகைதான் நான்.. நடிகை சமந்தா அதிரடி பேட்டி

நான் இப்போதும் சராசரி நடிகைதான் என்று நடிகை சமந்தா பேட்டி அளித்துள்ளார்.
2010-ல் வெளியான ‘பாணா காத்தாடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. அதனைத் தொடர்ந்து, மாஸ்கோவின் காவிரி, நடுநசி நாய்கள், நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகை சமந்தா 10 ஆண்டுகளை கடந்து தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ளார். இவருக்கு தமிழ், தெலுங்கு திரை உலகில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகை சமந்தா தற்போது ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், சமந்தா பேட்டி ஒன்று அளித்துள்ளார்.
அதில், “நான் இப்போதும் சராசரி நடிகைதான். இன்னும் நடிப்பில் முதிர்ச்சியை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறேன். எனது சினிமா பயணத்தில் எத்தனையோ வெற்றிகளை சந்தித்து இருந்தாலும் அவை அனைத்துக்கும் கூட்டுமுயற்சிதான் காரணம். ஒரு படத்துக்கு பின்னால் நிறைய நிபுணர்களின் உழைப்பு இருக்கிறது.
ஒரு திரைப்படத்துக்கு பின்னால் திறமையான குழுவினர் இருந்தால்தான் நமது திறமை வெளியே வரும். நான் திறமையான குழுவினர் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். இது எனது அதிர்ஷ்டம்” என்றார்.