காந்தியை கொன்றவர்கள் ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசம்

 
Prakash Raj

காந்தியை கொன்றவர்கள் ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்? என்று நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் வெளியாகும் திரைப்படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து தேசிய விருது வழங்கி திரைப்பட கலைஞர்களை பாராட்டியும், கௌரவப்படுத்தியும் வருகிறது. குறிப்பாக சிறந்தப் படம், நடிகர், நடிகை, இயக்கம் என பல பிரிவுகளில் விருதுகள் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில் 2021-ம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டன.

இதன்படி பி.லெனின் இயக்கிய ‘சிற்பிகளின் சிற்பங்கள்’ சிறந்த கல்வி திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருதை ‘காஷ்மீர் பைல்ஸ்’ வென்றுள்ளது. சிறந்த தமிழ்படமாக மணிகண்டன் இயக்கிய ‘கடைசி விவசாயி’ படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ‘கடைசி விவசாயி’ படத்தில் நடித்த மறைந்த நடிகர் நல்லாண்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

Prakash-Raj

‘கருவறை’ ஆவணப்படத்திற்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பார்த்திபன் இயக்கிய ‘இரவின் நிழல்’ படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மாயவா தூயவா’ பாடலை பாடிய ஸ்ரேயா கோஷல் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதை வென்றுள்ளார். மேலும் சிறந்த படம் என்ற பிரிவில் மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி’ படத்திற்கும் ஸ்பெஷல் ஜுரி விருது, இந்தியில் விஷ்ணுவர்தன் இயக்கிய ‘ஷெர்ஷா’ படத்திற்கும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்கு விருது அறிவிக்காதது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. இதற்கு சுசீந்திரன், பி.சி ஸ்ரீராம் உள்ளிட்ட திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


அந்த வகையில் பிரகாஷ் ராஜ், “காந்தியைக் கொன்றவர்கள், இந்திய அரசியலமைப்பை தந்த  அம்பேத்கரின் சமத்துவ தத்துவத்தை கொல்ல முயற்சிப்பவர்கள் ஜெய் பீம் திரைப்படத்திற்கு எப்படி விருது தருவார்கள்?” என ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜெய் பீம் படத்தில் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web