பிரண்ட்ஸ் சீரீஸ் புகழ் ஹாலிவுட் நடிகர் மரணம்.. பெரும் சோகத்தில் ரசிகர்கள்!

 
Mathew Perry

பிரண்ட்ஸ் தொடர் மூலம் பிரபலமான ஆங்கில நடிகர் மேத்யூ பெர்ரி, தனது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்க பட்டுள்ளார். அவருக்கு வயது 54.

அமெரிக்க தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் தொடர்களில் ஒன்று பிரண்ட்ஸ். காலம் கடந்தும் ரசிகர்களின் ஃபேவரைட் சீரிஸ்களில் ஒன்றாக கருதப்படும் பிரண்ட்ஸில் சாண்ட்லர் என்ற கதாபாத்திரத்தில் வந்து அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்தியவர் மேத்யூ பெர்ரி.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடிகர் மேத்யூ பெர்ரி வசித்து வந்தார். இவர், நேற்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் தன் வீட்டில் உள்ள ஜக்குஸி எனும் மினி நீச்சல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து விசாரித்ததில், மேத்யூ, அதிகாலையில் வீட்டிற்கு வந்ததாகவும் தனது உதவியாளரை ஒரு முக்கிய வேலை காரணமாக வெளியில் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. 

Mathew Perry

அந்த பணியாளர் 2 மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்து திரும்பி பார்க்கையில் மேத்யூ நீச்சல் குளத்தில் சடலமாக கிடந்தாக கூறப்படுகிறது. இதையடுத்து 911 உதவி எண்ணிற்கு மேத்யூ வீட்டிற்கு அருகில் இருப்பவர்களும் அவரது உதவியாளரும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மேத்யூவின் உடலை மீட்டுள்ளனர். 

மேத்யூ, தனது நீச்சல் குளத்தில்தான் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். மேத்யூ, தண்ணீரில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதன் காரணமாக அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வீட்டிற்கு திரும்புவதற்கு முன்னர், நடிகர் மேத்யூ உடலுக்கு அதீத பயிற்சி கொடுக்கும் வகையில் ஏதாவது ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் அதன் மூலமாக கூட மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் அந்நாட்டு ஊடகத்தினரிடம் கூறியுள்ளனர். 

RIP

கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை, தொலைக்காட்சியில் பத்து சீசன்களாக வெளியான பிரண்ட்ஸில் கலக்கிய மேத்யூ பெர்ரி, 'Fools Rush In', 'The Whole Nine Yards' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பல ஆண்டுகளாக, அதீத மது போதை பழக்கம் காரணமாக மேத்யூ பெர்ரிக்கு உடல் நல பிரச்னைகள் இருந்து வந்துள்ளது.

இதனால், மது பழக்கத்தில் இருந்து விடுபட பல முறை மறுவாழ்வு மையத்துக்கு சென்று வந்துள்ளார் மேத்யூ பெர்ரி. சமீபத்தில் வெளியான பிரண்ட்ஸ் ரீயூனியன் நிகழ்ச்சியில், தனக்கு உடல் நல பிரச்னைகள் இருந்ததாகவும் படப்பிடிப்பின்போது கவலை காரணமாக இரவில் தூங்க முடியாமல் தவித்ததாகவும் மேத்யூ பெர்ரி கூறியிருந்தார். இது, சக நடிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

From around the web