இடுப்பு எலும்பில் மறுபடியும் சர்ஜரி? நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதி!!
நடிகை குஷ்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகர்களால் கோயில் கட்டி கொண்டாடப்படும் அளவிற்கு 90-களில் இருந்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாகவும் நடிகையாகவும் விளங்கி வரும் நடிகை குஷ்பு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்துள்ளார். தற்போது பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக விளங்கி வரும் திரைப்பட நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் குஷ்பு, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அண்மையில் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிலையில் நடிகை குஷ்பு கடந்த 2 ஆண்டுகளாகவே இடுப்பு பகுதியில் அமைந்துள்ள வால் எலும்பில் (Tail bone) ஏற்படும் வலியால் மிகுந்த அவதிப்பட்டு வருகிறார். உடல் எடையை குறைத்த பின்னரும் இடுப்பு வால் எலும்பில் (Tail bone) குஷ்புவுக்கு வலி குறைந்தபாடில்லை.
இதனால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் இதற்கான சிகிச்சைகளை தொடங்கினார். இதனிடையே மருத்துவர்கள் அறுவுரைப்படி கடந்த அக்டோபர் மாதம் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் மைக்ரோ இன்சிஷன் முறையில் நுண்துளை அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட குஷ்பு அதன் பின்னர் ஓரளவு ஆக்டிவாக இயங்கத் தொடங்கினார்.
அறுவை சிகிச்சையானது அட்வான்ஸ்டு தொழில்நுட்பத்தில் மேற்கொள்ளப்பட்டதால் மீண்டும் எலும்பு பகுதியில் வலி உட்பட எந்த பிரச்சனையும் ஏற்படாது என நம்பினார். இதனிடையே இப்போது மீண்டும் அவருக்கு இடுப்பு எலும்பு பகுதியில் உள்ள வால் எலும்பில் வலி ஆரம்பித்திருக்கிறது.
On the road to recovery! Underwent a procedure for my coccyx bone ( tail bone ) yet again. Hope it heals completely. 🙏 pic.twitter.com/07GlQxobOI
— KhushbuSundar (@khushsundar) June 23, 2023
இதையடுத்து மீண்டும் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குஷ்பு, பூரண நலம்பெறுவேன் என நம்புவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இதனிடையே இது குறித்து தகவலறிந்த அவரது அரசியல் மற்றும் சினிமா நண்பர்கள் குஷ்புவிடம் நலம் விசாரித்து வருகிறார்கள். இதனிடையே சிகிச்சைகளை முடித்துக்கொண்டு ஓரிரு நாட்களில் குஷ்பு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.