சாலை விபத்தில் சிக்கி கால் இழந்த வாரிசு பட நடிகர்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
Suraj Kumar

கர்நாடாகாவைச் சேர்ந்த இளம் நடிகர் சூரஜ் குமார், விபத்தில் தனது ஒரு கால் இழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சாண்டல்வுட்டில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்திருப்பவர் சூரஜ் குமார். 24 வயதான இவர் சினிமாவிற்காக தனது பெயரை துருவன் என்று மாற்றிக்கொண்டார். இவர், கன்னட நடிகர் ராஜ்குமாரின் நெருங்கிய உறவினரும், பிரபல தயாரிப்பாளருமான எஸ்.ஏ. ஸ்ரீனிவாஸின் மகன் ஆவர். தற்போது ரதம் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக இருந்தார்.

இந்த நிலையில், இவர், தனது இருசக்கர வாகனத்தில் கடந்த சனிக்கிழமை மைசூரிலிருந்து உதகைக்கு சென்றுள்ளார். பேகுர் அருகே மைசூரு - குண்ட்லுபேட் தேசிய நெடுஞ்சாலையில் மாலை 4 மணியளவில் சென்றுக் கொண்டிருந்தப்போது, டிராக்டரை முந்தி செல்ல முயன்றுள்ளார். 

Suraj Kumar

அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவரது இருசக்கர வாகனம் எதிரே வந்த டிப்பர் லாரி மீது மோதி கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த சூரஜ் குமார், உடனடியாக மைசூருவில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், மருத்துவர்கள், சூரஜ்குமாரின் உயிரை காப்பாற்றும் பொருட்டு, பலத்த சேதமடைந்த அவரது வலது காலின் முழங்காலுக்கு கீழே இருந்த பகுதியை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Suraj Kumar

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வரும் சூரஜ் குமாரை, கன்னட நடிகர் சிவராஜ் குமார் மற்றும் அவரது மனைவி நேரில் சென்று பார்த்துள்ளனர். தற்போது ரதம் என்றப் புதிய படம் ஒன்றில் சூரஜ் குமார் நடித்து வருகிறார். மேலும், நடிகர் சூரஜ் குமார் பெயரிடப்படாத புதியப் படம் ஒன்றில், மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்வுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

From around the web