பாஜகவினர் இன்னும் பார்க்கவில்லையா? சொல்லி அடித்த கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்!!

இன்றைய வாழ்க்கையும் இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு வரப்போகும் மாற்றங்களையும் ஒன்றிணைத்து சிந்தனையை தூண்டக்கூடிய, விறுவிறுப்பான திருப்பங்களுடன், சினிமாத்தனமான முடிவுகள் இல்லாமல் காதலிக்க நேரமில்லை படத்தை வெற்றிப் படமாக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உருக உருக காதலித்து கரம் பிடித்த காதல் மனைவியான கிருத்திகா உதயநிதியிடம் இப்படி ஒரு முற்போக்கு சிந்தனைகள் நிறைந்த காதல் படத்தை யாரும் எதிர்ப்பார்த்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய முதல் படமான வணக்கம் சென்னையிலேயே தனி முத்திரை பதித்தவர் தான் கிருத்திகா உதயநிதி. வணக்கம் சென்னை, காளி மற்றும் வெப் தொடர் பேப்பர் ராக்கெட் பார்த்தவர்களுக்கு காதலிக்க நேரமில்லை ஆச்சரியத்தைத் தந்திருக்காது.
கதை சொல்வதில் தனக்கென ஒரு தனி உத்தியை கையாள்கிறார் கிருத்திகா உதயநிதி. கூடவே முற்போக்கு சிந்தனைகளையும் தன்னுடைய படங்களில் ஒரு அங்கமாகவே வைத்துள்ளார். காதலிக்க நேரமில்லை படத்தில் நாயகி நித்யா மேனனும், நாயகன் ரவி மோகனும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளனர். நிறைய காட்சிகளில் அவர்கள் நடிகர்கள் என்பதையே நாம் மறந்துவிடும் அளவுக்கு அந்தந்த வேடங்களாகவே மிளிர்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களும் இசையும் படத்தின் தரத்தை மேம்படுத்திக் காட்டுகின்றது.
படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகள் மற்றும் பேட்டிகளில் கிருத்திகா உதயநிதி மிகவும் தன்னம்பிக்கையுடன் பதிலளித்து இருந்தார். அவர் சொன்னது போலவே படம் தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலக அளவில் தமிழர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை திரையரங்குகளில் கண்கூடாகக் காண முடிகிறது.
பொங்கல் வெளியீட்டில் சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்தி வருகிறது காதலிக்க நேரமில்லை. இந்தப் படத்தைப் பற்றி தமிழ்நாடு பாஜகவினர் யாரும் எந்தக் கருத்தும் சொல்லவில்லை என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. நாம வாயத் தொறந்தா படம் சாதாரண ஹிட் படம், பம்பர் ஹிட் படம் ஆகிவிடும் என்று அடக்கி வாசிக்கிறார்களோ?