பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்.. பிரபல நடிகர் பகீர் மன்னிப்பு!

 
Suresh Gopi Suresh Gopi

பெண் பத்திரிகையாளர்களிடம் சுரேஷ் கோபி அநாகரீகமாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அந்த நிகழ்வுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் சுரேஷ் கோபி. இவர் தமிழில் அஜித்தின் தினா, சரத்குமாருடன் சமஸ்தானம், ஷங்கர் இயக்கிய ஐ உள்ளிட்ட சில படங்களில் நடித்து இருக்கிறார். விஜய் ஆண்டனியின் தமிழரசன் படத்திலும் நடித்துள்ளார். கேரள அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜக கட்சியைச் சேர்ந்த இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கோழிக்கோட்டில் சுரேஷ் கோபி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பெண் ஊடகவியாளர் ஒருவர் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். அப்போது அவர், பதில் அளித்துக் கொண்டே அந்த பெண்ணின் தோளில் கைவைத்துள்ளார். உடனே அப்பெண் தடுத்து விடுகிறார். இருப்பினும் மீண்டும் சுரேஷ் கோபி பெண் ஊடகவியலாளர் தோளில் கைவைக்க முயன்றுள்ளார். 

Suresh Gopi

இது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சுரேஷ் கோபி மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக அந்த பெண் நிருபர் கூறியுள்ளார். பெண் நிருபரிடம் மோசமாக நடந்து கொண்ட சுரேஷ் கோபி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் கேரள பத்திரிகையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

சுரேஷ் கோபியின் கையை அந்தப் பெண் நிருபர் தட்டிவிட்ட பின்னர் மீண்டும் அவர் மீது கை வைத்தது கடும் கண்டனத்திற்குரியது என்றும் பத்திரிகையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியாகி கடும் கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து சுரேஷ்போபி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.


இது குறித்து நடிகர் சுரேஷ் கோபி கூறியது, நான் எந்த மோசமான எண்ணத்துடனும் பெண் நிருபரிடம் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நான் செல்லும் வழிக்கு குறுக்கே அவர் நின்று கொண்டிருந்தார். பேட்டியை முடித்த பின்னர் நான் செல்ல முயற்சித்தபோது மீண்டும் மீண்டும் தேவையில்லாத கேள்விகளை அவர் கேட்டார். ஆனாலும் என்னுடைய மகளைப் போலவே கருதித் தான் அவரை தொட்டேன். என்னுடைய செயல் அவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இது குறித்து அவரிடம் பேசுவதற்காக நான் பலமுறை போனில் தொடர்பு கொண்டும் கிடைக்கவில்லை” எனக் கூறினார்.

From around the web