அரசுன் பட நடிகர் விபத்தில் பலி.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

 
Saranraj

சென்னையில் கார் மோதி அரசுன் பட நடிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மதுரவாயல் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சரண்ராஜ் (29). இவர் கட்டட தொழில் செய்து கொண்டே, சினிமாவில் துணை நடிகராகவும் பணியாற்றி உள்ளார். இதன் மூலம் இவர் அசுரன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஒரு மனைவி மற்றும் இரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் (ஜூன் 7) இரவு 11.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் கே.கே.நகர் ஆற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக அதிவேகமாக வந்த கார் முன்னால் சென்ற சரண்ராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட சரண்ராஜ், தலையில் பலத்த காயத்துடன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

Accident

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த சரண்ராஜ் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம், மதுபோதையில் காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது சாலிகிராமத்தைச் சேர்ந்த பழனியப்பன் (41) என்பது தெரிய வந்துள்ளது. 

பின்னர் பழனியப்பனிடம் மேற்கொண்ட விசாரணையில், பழனியப்பனும் திரைப்பட துணை நடிகர் ஆவார். குறிப்பாக, சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தில் நடித்து உள்ளார். மேலும், உயிரிழந்த சரண் ராஜும், பழனியப்பனும் சினிமாத் துறையில் பணியாற்றியபோது பழக்கம் ஏற்பட்டு நண்பர்களாகி உள்ளனர். பழனியப்பனுக்கு குடிக்கும் பழக்கம் இருப்பதால், போதை அதிகமானால் தனது காரை ஓட்டுவதற்கு அவ்வப்போது சரண்ராஜை அழைப்பதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார்.

அந்த வகையில், நேற்றும் பழனியப்பன் சரண்ராஜை அழைத்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற சரண்ராஜ், தன்னிடம் உள்ள இருசக்கர வாகனத்தை எங்கே விடுவது எனத் தெரியாமல் சிறிது தூரம் இருசக்கர வாகனத்தை தான் ஓட்டி வருவதாகவும், பின்னர் இருசக்கர வாகனத்தை வேறு ஒரு இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தி விட்டு காரை ஓட்டுவதாக தெரிவித்துள்ளார்.

இந்த அடிப்படையில் சரண்ராஜ், பழனியப்பன் ஒட்டி வந்த காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து பழனியப்பனை கைது செய்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், விபத்து ஏற்படுத்திய வாகனத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். முன்னதாக, விபத்தை ஏற்படுத்திய பழனியப்பன் மீது, கடந்த 2019ம் ஆண்டு மது போதையில் கார் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

From around the web