கேம் சேஞ்சர் டீசர்லயே ஆட்டத்தையே மாற்றிய ஷங்கர்.. பல கெட்டப்பில் புகுந்து விளையாடும் ராம் சரண்!

 
Game Changer

ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு ராம்சரண், இயக்குநர் சங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்துள்ளார். அரசியல் அதிரடி திரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. இயக்குநர் சங்கர் தெலுங்கு மொழியில் இயக்கும் முதல் படம் இதுவாகும். சங்கருடன் இணைந்து இயக்குநர் கார்த்தி சுப்புராஜ் இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்.

இதில் கியாரா அத்வானி நாயகி. அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, நவீன் சந்திரா, ஜெயராம், சுனில் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைக்க திரு ஒளிப்பதிவு மேற்கொள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு, மெகா பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.

Game Changer

கேம் சேஞ்சர் படத்தின் ‘ஜரகண்டி’ மற்றும் ‘ரா மச்சா மச்சா’ பாடல்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்தாண்டு ஜனவரி 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நவம்பர் 9-ம் தேதி கேம் சேஞ்சர் படத்தின் டீசர்  வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. 

நடிகை கியாரா அத்வானியின் போஸ்டரை நேற்று படக்குழுவினர் வெளியிட்டனர். இந்நிலையில், படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசர் மொத்தம் ஒரு நிமிடம் 31 நொடிகளுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகர் ராம் சரண் ஆறு கெட்டப்களில் தோன்றுகின்றார். மேலும், படத்தில் விஜய் படத்தின் ஃப்ரேம்கள் இடம் பெற்றுள்ளது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் எஸ்.ஜே சூர்யாவைப் பொறுத்தவரையில் இரண்டு கெட்டப்களில் தோன்றுகின்றார். இரண்டு கெட்டப்களும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஷங்கர் என்றாலே, பிரம்மாண்டம் தான் என அனைவருக்கும் தோன்றும். அப்படி இருக்கையில் இந்தப் படத்தின் டீசரில், பாடல் காட்சிகளில் மட்டும் ஷங்கர் தனது பிரம்மாண்டத்தைக் காட்டியுள்ளார். மேலும் படத்தின் கதை, ஷங்கரின் முதல்வன், சிவாஜி உள்ளிட்ட படங்களின் சாயல் இந்தப் படத்திலும் இருக்குமா என ரசிகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

From around the web