பிரபல பாப் பாடகருக்கு விவாகரத்து.. டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

 
Honey Singh

பிரபல பாடகர் யோயோ ஹனி சிங் மனைவி ஷாலினி தல்வாருக்கு டெல்லி நீதிமன்றம் விவாகரத்து வழங்கியுள்ளது.

பாங்க்ரா, ஹிப் ஹாப், ராப் இசை பாடல்களைப் பாடியும் இசையமைத்தும் பிரபலமானவர் பஞ்சாப்பைச் சேர்ந்த ‘யோ யோ ஹனி சிங்’. வட்டார மொழியில் இருந்து பாலிவுட்டில் அறிமுகமாகி பஞ்சாப் தாண்டி பட்டி தொட்டியெல்லாம் இவர் பிரபலமடைந்தவர். 2012-ம் ஆண்டு பாலிவுட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு பாடலுக்கு 70 லட்சம் ரூபாய் ஹனி சிங்குக்கு சம்பளம் வழங்கப்பட்டதாகத் தகவல்கள் பரவியது.

இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத், ஹனி சிங்கை அப்படியே குண்டுகட்டாகத் தூக்கி வந்து தமிழில் ‘எதிர் நீச்சல்’ படத்தில் பாடவைத்தார். அனிருத் - ஹிப் ஹாப் ஆதி ஆகியோருடன், யோ யோ ஹனி சிங் இணைந்து பாடிய ‘எதிர் நீச்சலடி’ பாடல் இன்றளவும் பிரபலம். பாட்ஷா போன்ற பாப் பாடகர்கள் வரவே அவருக்கான மவுசு தற்போது சற்று குறைந்தே உள்ளது என்று கூறலாம்.

Honey Singh

இந்த நிலையில் இவரது மனைவி ஷாலினி தல்வார், யோயோ ஹனி சிங் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக டெல்லி நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் யோயோ ஹனி சிங் தன்னை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துவதாகவும், தன்னிடம் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் குடி மற்றும் போதைக்கு அடிமையாகியுள்ளதாகவும் கூறியுள்ள அவர், ஒருமுறை தன்னை உணவு, குடிநீர் இன்றி 18 மணி நேரம் ஒரு அறையில் பூட்டி வைத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர அவருக்குப் பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும் அதைத் தான் பலமுறை தட்டிக் கேட்டும் அவர் கேட்கவில்லை என்றும் ஷாலினி தெரிவித்திருந்தார்.

Honey Singh

ஒரு கோடி ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்கும் தீர்வுக்கு வந்ததால் அவர் மீதான வழக்கை வாபஸ் பெற்றார் ஷாலினி தல்வார் . ஜனவரி  2011-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும் 13 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் 2022-ம் ஆண்டு பரஸ்பர விவாகரத்து கோரி அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

டெல்லி நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி பரம்ஜீத் சிங், பாடகர் ஹனி சிங் மற்றும் அவரது மனைவி ஷாலினி தல்வாருக்கு ஒரு வருடத்திற்கும் மேலாக தொடர்ந்த வழக்குக்குப் பிறகு அவர்களுக்கு விவாகரத்து ஆணையை வழங்கினார். விசாரணையின்போது, ​​நீதிபதி விவாகரத்து குறித்து எழுப்பிய கேள்விக்கு, ஹனி சிங் தனது மனைவியுடன் இனி சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்று பதிலளித்தார்.

From around the web