பிரபல இயக்குநர் வீட்டில் திருட்டு.. தேசிய விருதுகளையும் திருடிச் சென்ற கொடுமை!

 
Manikandan

தேசிய விருது பெற்ற இயக்குநர் மணிகண்டனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 5 சவரன் தங்க நகைகளோடு, தேசிய விருதையும் திருடி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015-ம் ஆண்டு வெளியான ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி போன்ற படங்களை இயக்கியுள்ளார். இதில் காக்கா முட்டை மற்றும் கடைசி விவசாயி தேசிய விருது பெற்ற படங்களாகும்.

Manikandan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள விளாம்பட்டி தான் மணிகண்டனின் சொந்த ஊர். இவரது சொந்த வீடும் அலுவலகமும் உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக தனது அடுத்த படத்தின் வேலைக்காக தனது குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார் மணிகண்டன். இதனையடுத்து உசிலம்பட்டியில் உள்ள மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துக் கொண்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

உசிலம்பட்டியில் உள்ள மணிகண்டன் வீட்டில் அவர் வளர்த்து வரும் நாய்க்கு டிரைவர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் இருவரும் உணவு வைக்கச் சென்றுள்ளனர். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியான அவர்கள், கொள்ளைச் சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீசாருக்கும் இயக்குநர் மணிகண்டனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

Usilampatti PS

இந்த விசாரணையின் முதற்கட்ட தகவல்களின் படி, கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள், பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 சவரன் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web