பிரபல காமெடி நடிகர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!

 
Bonda-Mani

பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 60.

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவர் போண்டா மணி. தமிழ் சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார். வடிவேலு பீக்கில் இருந்தபோது அவருடைய அணியில் தவறாமல் இடம் பெற்று வந்தவர். 1991-ம் ஆண்டு வெளியான பவுனு பவுனுதான் படத்தின் மூலம் அறிமுகமாகி, பல படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள போண்டா மணி, சுமார் 270 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

ஆரம்ப காலக் கட்டத்தில், கவுண்டமணி, செந்தில் படங்களில் அவர்களோடு சேர்ந்து காமெடி செய்தவர், போண்டா மணி. பிறகு நடிகர்கள் வடிவேலு, விவேக், சந்தானம், சூரி, யோகி பாபு ஆகிய காமெடி நடிகர்களோடு இணைந்து நடித்துள்ளார். வடிவேலுவுடன், இவர் நடித்துள்ள பல காமெடி காட்சிகள் இன்று வரை பேசப்பட்டு வருகின்றன.

Bonda-Mani

இந்த நிலையில் சினிமாவில் வாய்ப்பு குறைந்த நிலையில், ரியல் எஸ்டேட் மற்றும் பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் சக நடிகர்களான பெஞ்சமின், கிங்காங் உள்ளிட்டோருடன் கலந்து கொண்டு வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் இருதய கோளாறு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் நடிகர் போண்டா மணி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தமிழநாடு அரசு மற்றும் நடிகர்கள் என பல்வேறு தர்ப்பினர் உதவி செய்தனர்.

இந்த நிலையில், நேற்று (டிச. 23) இரவு 11.30 மணியளவில் பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் உள்ள தனது வீட்டில் நடிகர் போண்டா மணி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை அவரது உறவினர்கள் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

RIP

போண்டா மணியின் மறைவுக்கு சமூக வலைதளங்களில் பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை பொழிச்சநல்லூரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.

From around the web