சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கும் பிரபல நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
சினிமாவில் இருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளதாக நடிகை மீரா ஜாஸ்மின் அறிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2001-ல் வெளியான ‘சூத்ரதாரன்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், 2002-ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து, பாலா, புதிய கீதை, ஆஞ்சநேயா, ஆய்த எழுத்து, கஸ்தூரி மான், சண்டக்கோழி, நேப்பாளி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘விஞ்ஞானி’ படத்தில் கடைசியாக மீரா ஜாஸ்மின் நடித்திருந்தார். அதன்பிறகு மலையாளத்தில் அவர் படங்கள் நடித்தாலும் 9 வருடமாக தமிழ் சினிமா பக்கம் தலைகாட்டவில்லை. தற்போது மீண்டும் ‘டெஸ்ட்’ படத்தின் மூலம் ரீ- என்ட்ரி கொடுக்கிறார். இப்படத்தை இயக்குநர் சசிகாந்த் இயக்குகிறார். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.
இந்த நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் மீரா ஜாஸ்மின் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது, நான் ஏற்கனவே மாதவன், சித்தார்த் உடன் நடித்துள்ளேன். தமிழ்படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களை தயாரித்த சசிகாந்த படத்தில் பங்கு பெற்றது மகிழ்ச்சி. நயன்தாராவுடன் நடிக்க ஆவலாக உள்ளேன்.
இதுவரை சிறப்பான பயணமாகவே இருந்து வந்துள்ளது. நடிகையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சியானது. எனது தனிப்பட்ட வளர்ச்சிக்காக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்கலாம் என முடிவு செய்துள்ளேன். பின்னர் மீண்டும் வந்து பிடித்தமான படங்களில் நடிக்கலாமென திட்டமிட்டுள்ளேன்.
நான் பதிவிடும் பயணம் தொடர்பான எனது சமூக வலைதள புகைப்படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து நேர்மையான கருத்துகள் வருவது பிடித்துள்ளது. என்னை பின் தொடர்பவர்களுக்கு இதையெல்லாம் பகிர்வதற்கு சமூக வலைதளம் மிகவும் உதவிகரமாக இருந்தது என்று கூறியுள்ளார்.