வங்கசேத்தில் பிரபல நடிகை மர்ம மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

 
humaira-himu

பிரபல வங்கதேச நடிகை ஹுமைரா ஹிமு மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2006-ல் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார் நடிகை ஹுமைரா ஹிமு. இவர் 'பரி பாரி சாரி சாரி', 'ஹவுஸ்ஃபுல்', 'குல்ஷன் அவென்யூ' உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார். பின்னர் 2011-ல் வெளியான 'அமர் போந்து ராஷேட்' படத்தின் மூலம் சினிமாவிலும் நுழைந்தார்.

இந்த நிலையில், நடிகை ஹுமைரா ஹிமு கடந்த 2-ம் தேதி அவரது நண்பரால் டாக்காவில் உள்ள உத்தாரா அதுநிக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹுமைரா ஹிமு ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

humaira-himu

ஆனால் அவர் கழுத்தில் காயங்கள் இருந்ததால், மருத்துவமனை நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது. அதே போல், ஹுமைரா ஹிமுவை மருத்துவமனையில் சேர்க்க வந்த ஆண் நண்பர் ஒருவர், மருத்துவர்கள் பரிசோதித்து கொண்டிருக்கும் போதே அங்கிருந்து புறப்பட்டதாக தெரிகிறது.

இதனால் போலீசார் அவர் மீது சந்தேகம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில், ஹுமைரா ஹிமு தற்கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால், இறந்த அன்று அவர் தனது ஆண் நண்பருடன் சண்டை போட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

humaira-himu

எனவே மருத்துவமனையில் சேர்த்த நபர் மற்றும் ஹுமைரா ஹிமுவின் ஆண் நண்பர் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதனிடையே நடிகையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன்பிறகே இறப்புக்கான காரணம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நடிகை ஹுமைரா ஹிமுவுக்கு நெருங்கிய உறவினர்கள் யாரும் இல்லாததால், அவரது அத்தையை தொடர்பு கொள்ள போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். வங்கதேசத்தில் பிரபல நடிகை மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web